

சென்னை,
திருமண வயதை தாண்டியும் பெண் கிடைக்காமல் திண்டாடும் நாயகன் ரியோ ஒரு ரெயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். காதலிக்கவும் தொடங்குகிறார். ஆனால் காதலிக்க வேண்டும் என்றால் ஒரு நிபந்தனை. மாலை 6 மணிக்கு மேல் நான் வீட்டை விட்டு வெளியே வர மாட்டேன். அதனால் 6 மணிக்கு மேல் சந்திக்க கூடாது என்று வர்திகா 'கண்டிஷன்' போடுகிறார். மாலை 6 மணிக்கு மேல் ஏன் சந்திக்க கூடாது என்கிறார்.
இதன் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன? என்று ஆராய தொடங்குகிறார், ரியோ. இந்த ஆராய்ச்சியில் யோசித்து பார்க்க முடியாத ஒரு பிரச்சினை வர்திகாவுக்கு இருப்பது தெரிய வருகிறது. அது என்ன?, அது தெரிந்த பிறகும் ரியோ, வர்திகாவை காதலித்தாரா ? காதல் திருமணத்தில் முடிந்ததா? என்பதே மீதி கதை.
திருமணத்துக்கு ஏங்கும் இளைஞர் கதாபாத்திரத்தில் காமெடி கலந்து அசத்தியுள்ளார், ரியோ. காதலுக்காக ஏங்குவது, எதிர்பார்க்காத பிரச்சினை, அந்த பிரச்சினையை தீர்க்க போராடுவது என்று திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் ரியோவின் நடிப்பு இருக்கிறது. முந்தைய படங்களை விட நன்றாகவே மேம்பட்டு விட்டார்.
வர்திகா அழகான கதாநாயகியாக அலங்கரிக்கிறார். அவரது நடிப்பும் பல இடங்களில் பளிச்சிடுகிறது. ரியோவின் தந்தையாக நடித்திருக்கும் சேத்தன், அம்மாவாக நடித்திருக்கும் மாளவிகா அவினாஷ், தங்கையாக நடித்திருக்கும் தாபியா அபு, மாமனாக நடித்திருக்கும் முனீஷ்காந்த், நண்பராக நடித்திருக்கும் பாலாஜி தியாகராஜன் தயாளன், வர்திகாவின் அம்மாவாக நடித்திருக்கும் தீபா வெங்கட், மாமனாக நடித்திருக்கும் மா.கா.பா. ஆனந்த், தாத்தாவாக நடித்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தி ஆகியோர் பொருத்தமான தேர்வு.
ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுன் காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். அன்கிட் மேனனின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிப்பு. கலகலப்பான காட்சிகள் கொண்ட திரைக்கதை படத்துக்கு பலம். லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம்.
காதல், கலாட்டா என ரசிக்கும்படியான காட்சிகள் கொண்ட படமாக எடுத்து இயக்கியுள்ளார், ராமச்சந்திரன் கண்ணன். கிளைமேக்ஸ் காட்சி புதுமை.