

சென்னை,
தன்னைப் பற்றி மற்றவர்கள் பெருமையாக பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அபர்ணதி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வருகிறார். ஆனால், அந்த பாராட்டு சில நாட்களிலேயே அடங்கிப் போக, புகழ் ஆசையில் சில காரியங்களை செய்கிறார்.
ஒருகட்டத்தில் மாவட்ட கலெக்ட்ராக பதவியில் அமரும் அபர்ணதிக்கு, முதல்-அமைச்சரான இளவரசு மூலம் சில தடைகள் வருகிறது. ஆனால் தடைகளை முறியடிக்கும் அபர்ணதி, ஒருகட்டத்தில் இளவரசுவே தன் பேச்சை கேட்கும் நிலையை உருவாக்குகிறார். அவரது அசுர வளர்ச்சியை ஒடுக்க ஒரு கூட்டம் முயற்சிகிறது. பல தடைகளையும் உருவாக்குகிறது. அபர்ணதி அந்த தடைகளை முறியடித்து, தான் நினைத்ததை செய்து முடித்தாரா? என்பதே விறுவிறுப்பான மீதி கதை.
தைரியமான கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார் அபர்ணதி. அவரது கதாபாத்திரம் படத்தை தாங்கி பிடித்துள்ளது. அவரது பேச்சும், பார்வையும் ஷார்ப். தமிழக முக்கிய பெண் அரசியல் தலைவரின் சாயலாகவே அவரது நடிப்பு அமைந்துள்ளது. இனி பெரிய இடம் அவருக்கு காத்திருக்கிறது.
முதல்-அமைச்சராக வரும் இளவரசு, மத்திய மந்திரியாக வரும் ஜான் விஜய், அபர்ணதியின் தந்தையாக காளி வெங்கட், எதிர்க்கட்சி தலைவராக லிவிங்ஸ்டன், முன்னாள் முதல்-அமைச்சராக ஒய்.ஜி.மகேந்திரன், அமைச்சராக சரவண சுப்பையா என அனைவரது கதாபாத்திரங்களும் சிறப்பு. நிகழ்கால அரசியலையும் நினைவுபடுத்துகிறது. டி.எம்.கார்த்தி, சுரேஷ் சக்கரவர்த்தி, நோபல் கே.ஜேம்ஸ், சச்சு, மங்கல், சாய் தன்யா, ரேகா நாயர், சிறுமி சம்யுக்தா அனைவரது நடிப்பும் பிரமாதம்.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் படத்துக்கு பலம். அரசியல் களத்தில் நடக்கும் காட்சிகள் படத்துக்கு விறுவிறுப்பை கூட்டுகிறது. சில காட்சிகளில் இன்னும் தெளிவு இருந்திருக்கலாம்.
ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து கதையை சொல்லும் இயக்குனர் ராகுல் அசோக், அதில் அரசியல் கள நகர்வுகளையும் அட்டகாசமாக கையாண்டு ரசிக்க வைத்துள்ளார். இரண்டாம் பாகத்துக்கான குறிப்பையும் கொடுத்துள்ள இடம் பாராட்டு.