பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அழுத்தமாக சொல்லும் 'ஆகாயத்தில் ஒரு தாரகை' - சினிமா விமர்சனம்
ஆகாயத்தில் ஒரு தாரகை(4 / 5)
விமர்சனம்
விண்வெளி ஆராய்ச்சியாளராக துடிக்கும் சாத்விகா வீரவல்லிக்கு, அவரது பெற்றோர் பள்ளிப்படிப்பு முடிந்ததுமே துல்கர் சல்மானுடன் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். திருமணத்துக்கு பிறகு சாத்விகாவின் கனவை தெரிந்துகொள்ளும் துல்கர் சல்மான், அந்த கனவை நிஜமாக்க முடிவு செய்கிறார்.
கல்லூரியில் விண்வெளி ஆராய்ச்சி பாடத்தை படிக்க வைக்கிறார். கல்லூரியில் திறம்பட படிக்கும் சாத்விகா மாநில அளவில் நல்ல மதிப்பெண் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார். ராக்கெட் தயாரிக்கும் சர்வதேச போட்டி ஒன்றில் கலந்து கொள்கிறார். அனைவரையும் ஈர்க்கிறார்.
இதையடுத்து அவருக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பிட்ட ராக்கெட்டை வெற்றிகரமாக அதிகாரிகள் சொன்ன விதிகளுக்குள் பறக்க வைத்துவிட்டால் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஆகிவிடலாம் என்ற நிலை உருவாகிறது. உயிரை கொடுத்து வேலை செய்யும் சாத்விகாவின் கனவு கலைகிறது. ராக்கெட் வெடித்து சிதறுகிறது. அதேவேளை கல்லூரியிலிருந்து சாத்விகா சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அதன்பிறகு என்ன ஆனது? சாத்விகாவின் கனவு நிறைவேறியதா, இல்லையா? என்பதே மீதி கதை.
இயல்பான, எதார்த்தமான நடிப்பால் படம் முழுக்க கவர்கிறார், துல்கர் சல்மான். இப்படியும் கணவர் இருப்பாரா? என்ற ஆச்சரியத்தை பெண்கள் மனதில் விதைக்கிறார். பெண்களின் ஆதரவை அள்ளியிருக்கிறார். கிருஷ்ணா என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
வார்த்தைகளால் அல்லாமல் தனது கண்கள் மூலமாகவே வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார், சாத்விகா வீரவல்லி. சினிமாவுக்கு நல்வரவு. சுருதிஹாசனின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. ருஹானி ஷர்மா, நாசர், கவுதம் வாசுதேவ் மேனன், முரளி ஷர்மா, சுவாசிகா, கோட்டா ஜெயராம், மானசி சுதிர், சின்னி ஜெயந்த், பிரவின், காசி ரெட்டி, சைதன்யா ஜொன்னலகட்டா உள்ளிட்ட அனைவருமே கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்துள்ளனர்.
சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகு கண்களுக்கு விருந்தாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை வருடி செல்கிறது. எதார்த்தமான, உணர்ச்சிபூர்வமான காட்சிகள் படத்துக்கு பலம். சில இடங்களில் காட்சிகள் ஓரளவு யூகிக்க முடிகிறது.
பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அழுத்தமாக சொல்லி, பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் காட்சிகளை அடுக்கி ஆண்களுக்கு நல்லதொரு பாடத்தை, படத்தின் வழியாக புகுத்தி அசத்தியுள்ளார், இயக்குனர் பவன் சதினேனி. கிளைமேக்ஸ் காட்சி உணர்வுப்பூர்வமானது.

