இன் கார்: சினிமா விமர்சனம்

முழுப் படமுமே, கடத்தப்படும் பெண்ணின் மன வேதனையைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
இன் கார்: சினிமா விமர்சனம்
Published on

தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை கத்தியால் குத்தி கொன்ற இளைஞனை காப்பாற்ற அவனது அண்ணனும், மாமாவும் வெளியூர் அழைத்து செல்கிறார்கள். வழியில் கோவிலில் சாமி கும்பிடுகின்றனர். கார் பழுதாகி நிற்க, இன்னொரு காரை துப்பாக்கி முனையில் டிரைவரோடு கடத்துகிறார்கள். பாலியல் இச்சைக்கு தனக்கு ஒரு பெண் வேண்டும் என்று தம்பி அடம்பிடிக்கிறான்.

இதனால் ரோட்டோரம் நின்று கொண்டிருக்கும் ரித்திகா சிங்கை இழுத்து காருக்குள் தள்ளி கடத்துகிறார்கள். கார் பயணத்தில் ரித்திகா சிங் சந்திக்கும் அதீத பாலியல் துன்புறுத்தல்களும், அந்த கும்பலிடம் இருந்து தப்பினாரா என்பதும் மீதி கதை.

ரித்திகா சிங் அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் முழு படத்தையும் தாங்கி பிடிக்கிறார். பாலியல் கும்பலிடம் சிக்கி விட்டுவிடும்படி கெஞ்சி கதறும்போது படம் பார்ப்பவர்களையும் கலங்க வைக்கிறார். இரு ஆண்களுக்கு நடுவில் பாலியல் அத்துமீறல்களால் கூனிகுறுகி அமர்ந்து பாதிக்கப்படும் பெண்ணின் வலி, வேதனை உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி நடிப்பில் ஆச்சரியப்படுத்துகிறார்.

காமவெறி பிடித்த சைக்கோ வில்லனாக மனிஷ் மிரட்டுகிறார். கொலைகார தம்பியை காப்பாற்ற துடிக்கும் அண்ணனாக சந்தீப் கோயத், மாமாவாக வரும் சுனில் சோனி ஆகியோரும் அவரவர் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

கிளைமாக்சில் ரித்திகா சிங் கோபத்தில் ஆவேசமாக கத்துவது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணின் குரலாக ஒலிக்கிறது.

ஐந்து கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து, கடத்தலுக்கு உள்ளாகும் ஒரு பெண்ணின் வலி, வேதனையை நேர்த்தியாக காட்சிப்படுத்தி கவனிக்க வைத்துள்ளார் இயக்குனர் ஹர்ஷவர்தன்.

காருக்குள்ளே பெரும்பகுதி கதை நகர்வது சலிப்பாக உள்ளது. ஆனாலும் அதை விறுவிறுப்பான திரைக்கதையில் மறக்கடிக்க செய்கிறார். படம் முடிந்த பிறகும் கதையின் தாக்கம் மனதில் நிற்கிறது.

ஒளிப்பதிவாளர் மிதுன் கங்கோ பாத்யாய் காருக்குள் நடக்கும் கதையை கச்சிதமாக படம்பிடித்து உள்ளார்.

இசையமைப்பாளர் மத்தியாஸ் டூப்ளிஸ்ஸின் பின்னணி இசை கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com