

ரவி தேஜா தனது மனைவி பிரியா பவானி சங்கர் மற்றும் மகள் நட்சத்திராவுடன் வாழ்ந்து வருகிறார். ரவி தேஜா குடிப்பழக்கத்திற்கு அடிமையான தொழிலாளி. வருடத்தில் சபரிமலைக்கு செல்ல விரதம் இருக்கும் 41 நாள் மட்டும் தான் குடிக்காமல் உள்ளார். மற்ற எல்லா நாட்களும் குடியில் தான் இருக்கிறார்.
ரவி தேஜாவுக்கு தனது மகள் மீதுதான் உயிர். தன் மகள் மட்டுமின்றி ஊரில் எந்த பெண் பிள்ளைக்கு ஆபத்து என்றாலும் முதல் ஆளாக அவர் வந்து அடித்து வெளுக்கும் அளவிற்கு பெண் குழந்தைகள் என்றால் மிக அன்பாக இருப்பவர். அப்படி இருக்கும் அவர் ஊரில் 4 பேர் வந்து ஊரில் உள்ள பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு தொந்தரவு செய்கின்றனர். அவர்களையும் ரவிதேஜா அடித்து வெளுக்கிறார். மேலும் சபரிமலை விரதம் இருக்க போவதால் தன்னிடம் அடி வாங்கியவர்கள் இந்த 41 நாள் ஊருக்குள்ளே வரக்கூடாது என மிரட்டியும் அனுப்பி விடுகிறார்.
அந்த நான்கு பேரில் ஒருவரது பார்வை ரவி தேஜாவின் மகள் மீது விழுகிறது. தன்னை அடித்து அவமானப்படுத்திய ரவி தேஜாவை பழிவாங்க அவரது மகளை சிதைக்க நினைக்கிறார். இந்த ஆபத்திலிருந்து தனது மகளை ரவி தேஜா காப்பாற்றினாரா? அவரது சபரிமலை விரதம் என்ன ஆனது? என்பதே பரபரப்பான மீதி கதை.
வழக்கமான ஆட்டம் பாட்டம் டூயட் போன்றவற்றை தாண்டி இந்த முறை வித்தியாசமான கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கியுள்ளார் ரவி தேஜா. ஆக்சனிலும், எமோஷனல் காட்சிகளிலும் அவரது அனுபவ நடிப்பு பளிச்சிடுகிறது. பெண் குழந்தைகளுக்கு அவர் சொல்லும் அறிவுரைகள் சபாஷ்.
அழகாலும், அளவான நடிப்பாலும் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்து விடுகிறார் பிரியா பவானி சங்கர். சிறுமியாக நடித்துள்ள நட்சத்திரா எல்லோரது உள்ளங்களிலும் நிச்சயம் இடம் பிடித்து விடுவார். வெகுளித்தனமான அவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது.
சாய் குமார், அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, சுவாசிகா, ராஜ்குமார், ரமணா பார்கவ் உள்பட இதர நடிகர் - நடிகைகளும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளனர்.
விஷ்ணு சர்மாவின் ஒளிப்பதிவில் காட்சிகளும், ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்களும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன. எதார்த்தமான மனதை தொடும் எமோஷனல் காட்சிகள் படத்துக்கு பலம். சில காட்சிகளை யூகிக்க முடிகிறது.
பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு எத்தகைய பாதுகாப்பு தேவை, பெற்றோர்கள் அவர்களை எப்படி கையாள வேண்டும், வளர்க்க வேண்டும்? என்பது குறித்து ஒரு விழிப்புணர்வு பாடமாகவே இந்த படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார் சிவா நிர்வானா. கிளைமாக்ஸ் காட்சி விறுவிறுப்பின் உச்சம்.