“ஜாக்கி” சினிமா விமர்சனம்

பிரகபல் இயக்கிய ‘ஜாக்கி’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
ஆட்டோ டிரைவரான யுவன் கிருஷ்ணா, கிடா சண்டை மீது அதிக ஈடுபாடு உள்ளவர். அதேவேளை பணக்காரரான ரிதன் கிருஷ்ணா கிடா சண்டையை கவுரவமாக கருதுகிறார். இதற்கிடையே நடக்கும் ஒரு சண்டையில் யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிரிஷ்ணாவின் கிடாயை வீழ்த்தி விட, அதன் மூலம் இருவருக்கும் இடையே பகை உண்டாகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி வெட்டு குத்து, அடிதடி மோதல் நடக்கிறது. கிடா சண்டை மூலம் ஆரம்பித்த இவர்களுடைய பகைக்கு, அதே கிடா சண்டை போட்டி மூலம் முற்றுப்புள்ளி வைக்க ஊர் பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள். அதன் பிறக என்ன நடந்தது? என்பது தான் மீதி கதை.
நாயகனாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா, மதுரை இளைஞராக நடிப்பில் மிரட்டியிருக்கிறார். கிடா போல சண்டை காட்சிகளில் பாய்கிறார். அதேவேளை காதல் காட்சிகளிலும் அசத்துகிறார். வில்லனாக மிரட்டியிருக்கும் ரிதன் கிருஷ்ணா, பஞ்ச் வசனங்கள் பேசியும் கலக்குகிறார். அடிதடி காட்சிகளிலும் புகுந்து விளையாடியுள்ளார்.
கொடுத்த வேலையை குறைவின்றி செய்து பாராட்டை அள்ளுகிறார், அம்மு அபிராமி. மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வு.
என்.எஸ்.உதயகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகளில் எதார்த்தமும் பரபரப்பும் தொற்றிக் கொள்கிறது. சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்துடன் கட்டிப் போடுகிறது.
பரபரப்பான காட்சிகள் பலம். பிற்பாதி திரைக்கதையில் வேகம் இருந்திருக்கலாம். மதுரை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடக்கும் கிடா சண்டை போட்டியை மையப்படுத்திய கதையை எதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குனர் பிரகாபல், கிடா சண்டை போட்டிகளை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.






