மர்மமும் திகிலும் கலந்த ‘ஜான் டோ’ - சினிமா விமர்சனம்

மர்மமும் திகிலும் கலந்த ‘ஜான் டோ’ - சினிமா விமர்சனம்

இயக்குனர் மதுமிதா இயக்கிய ‘ஜான் டோ’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
Published on: 
Cinema Review(3.5 / 5)

சென்னை,

இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் அடையாளம் தெரியாத ஆண் சடலங்களுக்கு 'ஜான் டோ' என்றும், பெண் சடலங்களுக்கு 'ஜேன் டோ' என்றும் குறிப்பிடுவார்கள். இந்தப் பெயரை மையமாக வைத்து மர்மமும், திகிலும் கலந்த கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் மதுமிதா. தாயை இழந்த துயரம் ஒருபுறம், தந்தையின் மறுமணம் ஏற்படுத்தும் மன உளைச்சல் மறுபுறம் எனப் பல்வேறு உணர்ச்சிப் போராட்டங்களுக்கு இடையே வாழ்கிறார் சாரா. தந்தையின் இரண்டாவது மனைவி மற்றும் அவரது மகன் நீரவுடன் இந்தியா வரும் அவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது. திடீரென நீரவ் மாயமாக, குடும்பத்தினரின் பதற்றம் அதிகரிக்கிறது.

மறுபுறம், கேரள எல்லையில் கண்டெடுக்கப்படும் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தொடர்பான விசாரணையில் இறங்குகிறார் போலீஸ் அதிகாரி அர்ஜூன் தாஸ். அவரது விசாரணை தமிழகத்தை நோக்கி நகரும்போது, காணாமல் போன நீரவுக்கும் இந்த வழக்குக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பது தெரியவருகிறது. இதையடுத்து சஞ்சனா நடராஜனும் விசாரணையில் இணைகிறார்.

ஒவ்வொரு தகவலாக வெளிவரும்போது, இது ஒரு சிறுவனின் மாயமான வழக்கு மட்டுமல்ல என்பது புரிகிறது. பல சிறுவர்கள் காணாமல் போனதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான மர்மங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படுகின்றன. இதற்கிடையே, தன்னைப் பற்றிய அடையாளங்களையே மறந்த நிலையில் நீரவ் மீண்டும் உயிருடன் வருவது கதையில் மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த மர்மங்களுக்குப் பின்னால் இருப்பது யார்? அர்ஜூன் தாஸ் தேடும் கொலையாளி கிடைத்தாரா? சிறுவர்கள் காணாமல் போனதற்கான உண்மையான காரணம் என்ன? என்ற கேள்விகளுக்கு விடை தேடிச் செல்கிறது மீதிக்கதை.

போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்துக்கு தனது கம்பீரமான குரலாலும், உடல்மொழியாலும் வலு சேர்த்திருக்கிறார் அர்ஜூன் தாஸ். விசாரணையில் காட்டும் தீவிரமும், முகத்தில் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும் அவரது நடிப்புக்கு பலம் சேர்க்கின்றன. சஞ்சனா நடராஜனும் காவல்துறை அதிகாரியாக கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். சாராவாக வரும் நடிகையின் இயல்பான நடிப்பு கதாபாத்திரத்தின் மனநிலையை உணரச் செய்கிறது.

நீரவ், சிருஷ்டி, அனுபமா குமார், அர்ச்சனா, கார்த்திக் குமார், படவா கோபி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர். பிரீத்தி ஜெயராமனின் ஒளிப்பதிவு கதையின் மர்மத்தன்மைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. முஜீப் மஜித்தின் இசை காட்சிகளுக்கு துணை நிற்கிறது.

அடையாளம் தெரியாத சடலம், காணாமல் போகும் சிறுவர்கள், நினைவுகளை இழக்கும் குழந்தை என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை போலத் தோன்றும் சம்பவங்களை ஒரே கதைக்குள் இணைத்திருப்பது இயக்குனரின் சுவாரஸ்யமான முயற்சி. குறிப்பாக, சிறுவர்கள் மாயமானதன் பின்னணியில் வரும் திருப்பங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

ஆனால், முதல் பாதியில் இருந்த வேகமும் பரபரப்பும் இரண்டாம் பாதியில் சற்றுக் குறைகின்றன. விறுவிறுப்பாக நகர வேண்டிய சில காட்சிகளில் நீளமான வசனங்கள் வேகத்தடையாக மாறுகின்றன. வில்லன் கதாபாத்திரத்தின் உளவியல் பின்னணியிலும் இன்னும் கூடுதல் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.

குற்றம், மர்மம், உளவியல் சிக்கல்கள் எனப் பல அம்சங்களை ஒன்றிணைத்து வித்தியாசமான திரில்லர் அனுபவத்தைத் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் மதுமிதா. சில குறைகள் இருந்தாலும், சிறுவர்கள் காணாமல் போகும் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்ம முடிச்சுகளும், எதிர்பாராத திருப்பங்களும் படத்தை கவனிக்க வைக்கின்றன.

X