சினிமா விமர்சனம்: கணம்

டைம் மிஷினை பயன்படுத்தி நிகழ்கால பிரச்சினைகளை மாற்றி அமைக்க கடந்த காலத்துக்கு பயணித்து பிரச்சினைகளை சரி செய்தார்களா? என்பது கதை.
சினிமா விமர்சனம்: கணம்
Published on

இசைக் கலைஞர் சர்வானந்த், வீட்டு தரகர் ரமேஷ் திலக், திருமணம் செய்து கொள்ள பெண் தேடி அலையும் சதீஷ் மூவரும் நண்பர்கள். சர்வானந்த் சிறுவயதில் விபத்தில் இறந்த தாயின் நினைவாலும் மேடை பயத்தாலும் இசையில் சாதிக்க முடியாமல் தவிக்கிறார். அப்போது விஞ்ஞானி நாசர் 20 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து தான் கண்டுபிடித்த டைம் மிஷினை பயன்படுத்தி கடந்த காலத்துக்கு சென்று தாயை சந்தித்து அவருக்கு நேர்ந்த விபத்தை தடுத்து காப்பாற்றி விடலாம் என்கிறார். கடந்த காலத்தில் இறந்த சக விஞ்ஞானியையும் காப்பாற்ற சொல்கிறார். அதை சர்வானந்த் ஏற்கிறார். அவரோடு ரமேஷ் திலக், சதீஷ் ஆகியோரும் தங்கள் நிகழ்கால பிரச்சினைகளை மாற்றி அமைக்க கடந்த காலத்துக்கு செல்ல விரும்புகின்றனர். மூவரும் 1998 காலத்துக்கு பயணிப்பதும் பிரச்சினைகளை சரி செய்தார்களா? என்பதும் மீதி கதை.

சர்வானந்த் உணர்வுகளை உயிரோட்டமாக வெளிப்படுத்தி நடித்துள்ளார். கடந்த காலத்துக்கு சென்று தனது தாயை உயிரோடு சந்திக்கும்போது விழிகளில் நீர்கோர்க்க பாசத்தை வெளிப்படுத்தும் இடம் நெஞ்சை பிழிய வைக்கிறது. சதீஷின் பெண் தேடும் படலங்கள் சிரிக்க வைக்கின்றன. மூவரும் தாங்கள் படித்த பள்ளிக்கு சென்று அங்கு தங்களை சிறுவர்களாக பார்ப்பதும் அவர்களோடு பழகி எதிர்காலத்தை சிறப்பாக மாற்ற முயற்சிப்பதும் ரசனை. மகன் மீது பாசம் பொழியும் அமைதியான அம்மாவாக வரும் அமலா மனதில் நிற்கிறார். விஞ்ஞானி வேடத்தில் நாசர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகிறார். சிறுவர்கள் ஜே, நித்யா, ஹரிதேஷ் கதாபாத்திரங்களில் நேர்த்தி. காலப்பயண கதையை திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்தி கவனம் பெறுகிறார் டைரக்டர் ஶ்ரீகார்த்திக். அம்மா மகன் பாசத்தை தாண்டி இன்னும் சில சுவாரஸ்யங்களை சேர்த்து இருந்தால் பேசப்பட்டு இருக்கும். நாயகி ரிது வர்மா கொஞ்ச நேரம் வந்தாலும் நிறைவு. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் சுஜித் சாரங் ஒளிப்பதிவும் காலப்பயண கதைக்கு பலம் சேர்த்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com