கண்டதை படிக்காதே: சினிமா விமர்சனம்

கண்டதை படிக்காதே: சினிமா விமர்சனம்
Published on

இளம்பெண் மொபைலில் எதையோ படித்துக்கொண்டு ஆட்டோவில் ஏறி வீட்டுக்கு சென்று உடைந்த கண்ணாடியால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள எதிர்பார்ப்புடன் படம் தொடங்குகிறது.

அடுத்து ஒரு இளம் காதல் ஜோடி. திடுதிப்பென அந்த காதலன் தனது காதலியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறான். தொடர்ந்து அப்படியான உயிரிழப்புகள் நடக்க காவல் துறை விசாரிக்கிறது.

குறிப்பிட்ட ஒரு கதையைப் படிப்பவர்கள் ஏதோ ஒரு தூண்டுதலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வது தெரிய வருகிறது. தற்கொலைக்குத் தூண்டுகிற அளவுக்கு அந்த கதையில் என்ன இருக்கிறது? கதையை எழுதியவருக்கு என்னவானது? இப்படி அடுத்தடுத்து எழுகிற கேள்விகளுக்கு திகிலாக பதில் சொல்கிறது மீதி கதை..

கதையின் நாயகனாக, இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வரும் ஆதித்யா துறுதுறு நடிப்பால் கவர்கிறார். கொலைகளுக்கு பின்னணியில் இருக்கும் மர்மங்களை அலசி ஆராய்வது, எழுத்தாளரைத் தேடி ஊர் ஊராக போஸ்டர் ஒட்டித்திரிவது, சாமியாரின் தாக்குதலுக்கு ஆளாவது என தனக்கான காட்சிகளில் துடிப்பான நடிப்பால் கவனிக்க வைக்கிறார்.

நரபலி கொடுக்கும் சாமியாராக வரும் ஆரியன் மிரட்டுகிறார். எழுத்தாளராக வரும் சத்யநாராயணன், பயம் பதட்டம் என அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார். சபீதா ஆனந்த் சிறிது நேரம் வந்தாலும் நேர்த்தி. சுஜி சீனிவாசன், வைஷாலி, ஜெனி பெர்னாண்டஸ், ராஜ் நவீன் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நியாயம் செய்துள்ளனர்.

சில காட்சிகள் நாடகத்தனமாய் நகர்கிறது.

செல்வா ஜானகிராஜ் பின்னணி இசை, மஹிபாலன் ஒளிப்பதிவு திகில் கதைக்கு உதவி உள்ளது.

அமானுஷ்யம், திகில், திருப்பம் என விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தி கவனிக்க வைக்கிறார் டைரக்டர் ஜோதிமுருகன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com