கண்ணை நம்பாதே: சினிமா விமர்சனம்

கண்ணை நம்பாதே: சினிமா விமர்சனம்
Published on

ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் உதயநிதியும், ஆத்மிகாவும் காதலிக்கிறார்கள். ஆத்மிகாவின் வீட்டில் வாடகைக்கு சென்று உதயநிதி தங்குகிறார். ஒரு கட்டத்தில் இந்த காதல் விவகாரம் ஆத்மிகாவின் தந்தைக்கு தெரிய வர உதயநிதியை வீட்டில் இருந்து காலி செய்ய வைத்து துரத்துகிறார்.

வெளியே வீடு தேடும் உதயநிதிக்கு பிரசன்னாவுடன் தங்க இடம் கிடைக்கிறது. இந்த நிலையில் பூமிகா வேகமாக ஓட்டி வரும் கார் விபத்தில் சிக்குகிறது. அவருக்கு உதவுவதற்காக காரை உதயநிதி ஓட்டிச் சென்று வீட்டில் இறக்கி விடுகிறார். அப்போது மழை பெய்கிறது. உதயநிதியிடம் காரை கொடுத்து மறுநாள் கொண்டு வந்து தருமாறு சொல்கிறார் பூமிகா.

அடுத்த நாள் காரை திருப்பித் கொடுக்க உதயநிதி புறப்படும்போது கார் டிக்கியில் பூமிகா பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்கிறார். பூமிகா எப்படி கொலை செய்யப்பட்டார்? கொலையாளி யார்? உதயநிதி கொலை பழியில் இருந்து தப்பினாரா? என்பது மீதி கதை.

அப்பாவி இளைஞன் கதாபாத்திரத்தில் உதயநிதி அடக்கமான மாறுபட்ட நடிப்பை வழங்கி உள்ளார். பூமிகா பிணத்தை பார்த்து அதிர்வது, கொலை பழியில் இருந்து தப்பிக்க முயன்று மேலும் பிரச்சனைகளில் மாட்டி தவிப்பது, எதிரிகளை சாதுர்யமாக எதிர்கொள்வது, கிளைமாக்சில் எடுக்கும் பயங்கர முடிவு என நடிப்பில் அதகளம் பண்ணியிருக்கிறார்.

நாயகி ஆத்மிகா அழகாக இருக்கிறார். நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். பூமிகாவின் கேரக்டர் கதைக்கு வலு சேர்க்கிறது. ஸ்ரீகாந்த், பிரசன்னா, வசுந்தரா காஷ்யப் ஆகியோர் கிடைத்த வாய்ப்பில் பிரமாதமாக 'ஸ்கோர்' செய்து இருக்கிறார்கள்.

ஞானசம்பந்தம், பழ.கருப்பையா, மாரிமுத்து, சுபிக்ஷா, சதீஷ், சென்ராயன், ஆதிரா என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

சஸ்பென்ஸ் கிரைம் ஸ்டோரிக்கு ஏற்றவாறு பயமும் கலக்கமும் கலந்து பின்னணி இசை கொடுத்திருக்கிறார் சித்துகுமார்.

ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசனின் அயராத உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. இரவு காட்சிகளை மிரட்டலாக படம்பிடித்துள்ளார்.

சில இடங்களில் லாஜிக் மீறல்கள் உள்ளன. இரண்டாம் பாதியின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

பெண்ணுக்கு உதவி செய்யும் அப்பாவி இளைஞர் எப்படி சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் என்ற ஒற்றை வரிக் கதையை மிக சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் இயக்கியுள்ளார் இயக்குனர் மாறன். அடுத்து என்ன என்று யூகிக்க முடியாத திருப்பங்களுடன் திரைக்கதையை திகிலாக நகர்த்தி காட்சிகளோடு ஒன்ற வைத்ததில் இயக்குனர் திறமை பளிச்சிடுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com