“காட்டாளன்” - சினிமா விமர்சனம்

பவுல் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் வெளியான ‘காட்டாளன்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
“காட்டாளன்” - சினிமா விமர்சனம்
Published on

கேரளாவில் உள்ள ஒரு வனப்பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கடத்தல்காரன் சுனில், அந்த பகுதியில் யானைகளை வேட்டையாடி தந்தங்களை வெளிநாட்டுக்கு கடத்துகிறார். மேலும் பழங்குடியின மக்களையும் மிரட்டி பணிய வைத்து இருக்கிறார். இதற்கிடையில் சுனிலுக்கு போட்டியாக இருக்கும் கபீர் துகான், போலீசாரின் உதவியுடன் சுனில் கடத்தும் தந்தங்களை கைப்பற்றுகிறார்.

காவல்துறையினர் வசம் இருக்கும் பல கோடி மதிப்பிலான தந்தங்களை மீட்க ஆண்டனி வர்கீசின் உதவியை சுனில் நாடுகிறார். போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி தந்தங்களை மீட்டு சுனிலிடம் ஒப்படைக்கிறார் ஆண்டனி வர்கீஸ். சுனிலுக்கு வலதுகரமாக செயல்பட்டு வரும் ஆண்டனி வர்கீஸ், ஒரு கட்டத்தில் அவர் செய்யும் அநியாயங்களை தட்டி கேட்கிறார். மேலும் அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார்.

இதனால் ஆத்திரம் கொள்ளும் சுனில், ஆண்டனி வர்கீசை தீர்த்துக்கட்ட கபீர் துகானுடன் சேருகிறார். இதையடுத்து பழங்குடியின மக்களை ஒன்று திரட்டி கடத்தல்காரர்களுக்கு எதிராக மாபெரும் யுத்தம் நடத்த தயாராகிறார் ஆண்டனி வர்கீஸ். இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றது யார்? என்பதே பரபரப்பான மீதி கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸ் ஆக்சன் அதிரடியில் மிரட்டி இருக்கிறார். அவரது எதார்த்தமான நடிப்பு கவனம் ஈர்க்கிறது. சுனில் வழக்கமான முரட்டுத்தனமான நடிப்பால் அலங்கரிக்கிறார். ஸ்டைலிஷ் வில்லனாக கபீர் துகான் ஈர்க்கிறார்.

துஷாரா விஜயன் ஆக்சன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார். அவரது திடீர் என்ட்ரி ரசிக்க வைக்கிறது. பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் என அனைவருமே நிறைவான நடிப்பை தந்துள்ளனர்.

ரெனாடைவ் ஒளிப்பதிவும், ரவி பஸ்ரூரின் இசையும் படத்துக்கு பலம். புதுமையான காட்சிகள் இல்லாதது பலவீனம். பல இடங்களில் காட்சிகளில் நெருடல் எட்டிப் பார்க்கிறது.

பழங்குடியின மக்களின் சோக கதை, யானை தந்தங்களின் கடத்தல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து கமர்சியல் ரீதியாக கதை சொல்லி கவனம் எடுத்து இருக்கிறார் இயக்குனர் பவுல் ஜார்ஜ்.

X

Daily Thanthi
www.dailythanthi.com