கென் கருணாஸின் “யூத்” - சினிமா விமர்சனம்

கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள “யூத்” படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
கென் கருணாஸின் “யூத்” - சினிமா விமர்சனம்
Published on

10-ம் வகுப்பில் 'ஜஸ்ட் பாஸ்' ஆகி 11-ம் வகுப்புக்கு செல்லும் கென், படிக்காமல் காதலில் மனதை அலைபாய விடுகிறார். பருவக் கோளாறில் காதல் மயக்கத்தில் இருக்கும் 12-ம் வகுப்பு முடிப்பதற்குள் மூன்று காதல்களை கடக்கிறார். அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் ஆகியோரை அடுத்தடுத்து காதலிக்கிறார்.

காதல் மட்டுமே வாழ்க்கை என்று சுற்றிக் கொண்டிருக்கும் கென்னுக்கு, தனது குடும்பமும் எதிர்கால வாழ்க்கையும் தான் முக்கியம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் முக்கியமான சம்பவம் ஒன்று அரங்கேறுகிறது.அது என்ன? எப்படி அவரது வாழ்க்கை திசை மாறியது? என்பதை கலகலப்பாக சொல்லும் கதைக்களம் தான் யூத் படத்தின் கதை.

பள்ளி மாணவர் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்தும் கென், கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயமான நடிப்பை சேர்த்து அட்டகாசப்படுத்தி இருக்கிறார். காதல், காமெடி, கலாட்டா என கலக்கி இருக்கிறார். அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் என மூன்று நாயகிகளும் அழகு மற்றும் அளவான நடிப்பால் கவனிக்க வைக்கிறார்கள்.

கென் தந்தையாக வரும் சூரஜ் வஞ்சரமோடு, தாயாக வரும் தேவதர்ஷினி அனுபவ நடிப்பால் கவருகிறார்கள். கென் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்கள் உள்ளிட்ட அத்தனை பேரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அலங்கரித்து இருக்கிறார்கள்.

விக்கியின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கிறது. ஜிவி பிரகாஷின் இசை ஆட்டம் போட வைக்கிறது. 'முட்ட கலக்கி...' பாடல் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். ஜாலியான எதார்த்தமான திரைக்கதை படத்துக்கு பலம். பெற்றோர் பிள்ளைகள் இடையேயான உறவை சிறப்பாக கையாண்டு இருக்கிறார்கள். ஆங்காங்கே சின்ன சின்ன லாஜிக் மீறல்கள் இருந்தாலும், நகைச்சுவை காட்சிகள் மூலம் அதை ஈடு செய்திருக்கிறார்கள்.

கலகலப்பான திரைக்கதையால், நகைச்சுவையும் எமோஷனலும் கலந்து காட்சிகளை அடக்கி இயக்குனராகவும் கவனம் ஈர்த்துள்ளார் கென். ஹீரோயிசம் செய்யாமல் கதாபாத்திரத்தை உணர்ந்து தேவையான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகவே அவரை பாராட்டலாம். இளம் தலைமுறையினருக்கு மெசேஜ் உண்டு.

X

Daily Thanthi
www.dailythanthi.com