"கெணத்த காணோம்" திரைப்பட விமர்சனம்

இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள "கெணத்த காணோம்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
"கெணத்த காணோம்" திரைப்பட விமர்சனம்
Published on

சென்னை,

தண்ணியே இல்லாத ஊரில் யோகிபாபு பூசாரியாக உள்ளார். பக்கத்து ஊரை சேர்ந்த லவ்லினை காதலிக்கிறார். ஆனால் லவ்லினின் தந்தை, தண்ணீர் இல்லாத ஊரில் பெண்ணை கட்டித்தர யோசிக்கிறார். இதற்கிடையில் நீரோட்டம் பார்க்க வரவழைக்கப்பட்ட ஆசாமி, யோகிபாபு வீட்டில் கிணறு தோண்ட சொல்கிறார். தனக்கு திருமணம் ஆகவேண்டும், ஊருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று ஊர் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கிறார் யோகிபாபு.

இதற்கிடையில் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, தண்ணீருக்காக தோண்டும் கிணற்றில் வேறு ஒன்று கிடைக்கிறது. இதையடுத்து அந்த ஊரை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் ஆயத்தமாகிறார்கள். அப்படி அந்த கிணற்றுக்குள் என்ன தான் கிடைத்தது? அதனால் என்னென்ன விளைவுகளை அந்த ஊர் சந்தித்தது? என்பதே நகைச்சுவையான மீதி கதை.

வழக்கமான டைமிங், ரைமிங் காமெடிகளுடன் இந்தமுறை சீரியசான நடிப்பை கொடுத்து கவர்ந்துள்ளார், யோகிபாபு. காதல் காட்சிகளில் தான் கொஞ்சம் தடுமாறுகிறார். கதாநாயகியாக வரும் லவ்லின் சந்திரசேகர் கொடுத்த வேலையை சிறப்பாக முடித்துள்ளார். இன்னும் அவருக்கான காட்சிகளை வைத்திருக்கலாம். ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன் என அத்தனை பேரும் நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர். தியாகராஜன் ஒளிப்பதிவும், நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை யும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.

கலகலப்பு நிறைந்த காட்சிகள் படத்துக்கு பலம். லாஜிக் மீறல்களை தவிர்த்திருக்கலாம். இன்றளவும் கிராமங்களில் தண்ணீர் பிரச்சினை நிலவுவதை சுட்டிக்காட்டி, அங்கு நிலவும் அரசியலை தோலுரித்து காட்டி, நல்லதொரு விழிப்புணர்வை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் சங்கையா. படத்தின் ரிலீசுக்கு முன்பே அவர் காலமாகி விட்டது மனதை கணக்க செய்கிறது.

கெணத்த காணோம் - தேட வேண்டாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com