கிச்சா சுதீப்பின் "மார்க்" - சினிமா விமர்சனம்

விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள "மார்க்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சென்னை,
கர்நாடகாவில் உள்ள ஒரு போலீஸ்நிலையத்தில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பதுக்கப்படுகிறது. அது டானாக வலம் வரும் நவீன் சந்திராவுடையது என்பதும், அதனை கடத்தும் வேலையை செய்வது குரு சோமசுந்தரம் என்பதும் தெரியவருகிறது.
இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் கும்பலை களையெடுக்க போலீஸ் சூப்பிரண்டு கிச்சா சுதீப் களமிறங்குகிறார். சில பிரச்சினைகளால் சஸ்பெண்டில் இருக்கும் அவர், தனது குழுவினருடன் இந்த வேலையை ரகசியமாக செய்கிறார்.
இன்னொருபுறம் முதல்-மந்திரி படுத்த படுக்கையாகி போக, அவரை கொன்று முதல்-அமைச்சர் பதவிக்கு வர ஆயத்தமாகிறார் அவரது மகன் சைன் டாம் சாக்கோ. இந்த கொலையை டாக்டர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துவிடுகிறார்.
இந்த விவகாரம் சைன் டாம் சாக்கோவுக்கு தெரியவர அந்த செல்போனை தேடி டாக்டர் வீட்டுக்கு செல்கிறார்கள். அப்போதுதான் அந்த செல்போனுடன் டாக்டர் மகன் கடத்தப்பட்டிருப்பதும், அவரை போலவே 18 சிறுவர்-சிறுமிகள் கடத்தப்பட்டிருப்பதும் தெரியவருகிறது.
குழந்தைகள் ஏன் கடத்தப்பட்டனர்? கொலை வீடியோ அடங்கிய அந்த செல்போன் கிடைத்ததா? போதைப்பொருள் கும்பலை கிச்சா சுதீப் களையெடுத்தாரா? இதற்கெல்லாம் பின்னணி தான் என்ன? என்பதே படத்தின் பரபரப்பான மீதி கதை.
ஆக்ஷன் - அதிரடி ஒருபுறம், 'பஞ்ச்' டயலாக்குகள் மறுபுறம் என கிச்சா சுதீப் அமர்க்களப்படுத்துகிறார். சண்டை காட்சிகளிலும் பொறி பறக்க உக்கிரம் காட்டியுள்ளார். ஆக்ஷன் பிரியர்களை குஷிப்படுத்தி இருக்கிறார்.
நவீன் சந்திரா, விக்ராந்த் இருவரது நடிப்பிலும் வில்லத்தனம் நன்றாகவே பளிச்சிடுகிறது. தீப்ஷிகாவின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. சண்டை காட்சியிலும் கலக்கியுள்ளார். குரு சோமசுந்தரம், யோகிபாபு ஆகியோரின் கதாபாத்திரங்களில் எதிர்பார்த்த அழத்தம் இல்லை. சேகர் சந்திராவின் ஒளிப்பதிவு மிரட்டல். அஜனீஷ் லோக்நாத்தின் இசை படத்துக்கு பலம்.
அதிரடி காட்சிகள் பலம். ஆனால் திரைக்கதையில் கன்னாபின்னாவென்று வண்டி ஓட்டியிருக்கிறார்கள். சில இடங்களில் காட்சிகளில் பிணைப்பு இல்லை. லாஜிக் மீறல்கள் பற்றி துளியும் கவலையின்றி, ஆக்ஷன் பிரியர்களை மட்டுமே குறிவைத்து கவனம் ஈர்த்திருக்கிறார், இயக்குனர் விஜய் கார்த்திகேயா.







