கிக்: சினிமா விமர்சனம்

கிக்: சினிமா விமர்சனம்
Published on

இரண்டு விளம்பர ஏஜென்சிகள் இடையிலான தொழில் போட்டியே கதை. விளம்பர நிறுவனத்தில் வேலை பார்க்கும் சந்தானம் குறுக்கு வழியிலும் ஏமாற்றியும் கம்பெனி ஆர்டர்களை பிடித்து மளமளவென முன்னேறுகிறார்.

இதனால் இன்னொரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் தான்யா ஹோப்புக்கு சந்தானம் யார் என்பது தெரியாமலேயே அவர் மீது வெறுப்பு வருகிறது. சந்தானத்தை தொழிலில் வீழ்த்த சதி செய்கிறார். கோர்ட்டிலும் வழக்கு போடுகிறார்.

ஒரு நிகழ்ச்சியில் தான்யா ஹோப்பை சந்திக்கும் சந்தானம் அவர் அழகில் மயங்கி விஞ்ஞானியின் மகன் என்று பொய் சொல்லி காதலிக்க தொடங்குகிறார்.

இன்னொரு புறம் மாடலிங் பெண்ணை ஏமாற்றி போலி விளம்பர படம் எடுத்து வெளியிட்டு சிக்கலில் மாட்டும் சந்தானம் அதில் இருந்து விடுபட போராடுகிறார். பிரச்சினையில் இருந்து அவர் மீண்டாரா? காதல் கைகூடியதா? என்பது மீதி கதை..

சந்தானம் வழக்கமான டைம் காமெடி, கலாய்ப்பு, உடல்மொழி என்று கொடுத்த வேலையை சரியாக செய்து சிரிக்க வைக்கிறார். வேகமாக சண்டையும் போடுகிறார். தான்யா ஹோப் கவர்ச்சியில் வசியம் செய்கிறார்

விளம்பர கம்பெனி உரிமையாளராக வரும் தம்பிராமையா மைக்கேல் ஜாக்சன் ரசிகர் என்று ஆட்டம் போடுகிறார். அது ரசிக்க வைக்கிறது., ரீல்ஸ் எடுக்கிறேன் என்று திரியும் கோவை சரளாவும் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார்.

பிரம்மானந்தம், மன்சூர் அலிகான், செந்தில், வையாபுரி ஆகியோரும் கலகலப்பு ஊட்டுகிறார்கள். மதன்பாப், ஒய்.ஜி. மகேந்திரன் சிறிது நேரம் வந்தாலும் அவர்கள் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளனர்.

இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் பலகீனம். திரைக்கதையை இன்னும் சுவாரசியப்படுத்தி இருக்கலாம். அர்ஜுன் ஜன்யா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஒளிப்பதிவாளர் சுதாகர் காட்சிகளை வண்ணமயமாக கொடுத்து இருக்கிறார்.

சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் முழு காமெடி படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் ராஜ்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com