

சென்னை,
கடலூர் மாவட்டத்தில் ஒரு ரவுடியும், ஒரு கல்லூரி மாணவியும் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலை வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் யுகன் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, நான் தான் குற்றவாளி என்று கூறி முருகா அசோக் சரணடைகிறார்.
ஆனால் முருகா அசோக் மனநிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருபவர் என்ற தகவல் போலீசுக்கு தெரியவர, இன்னும் குழப்பம் மேலோங்குகிறது. இதனால் வழக்கு விசாரணையை வேறு ஒரு கோணத்தில் அணுகும் யுவன், வழக்கு தொடர்பாக பல்வேறு உண்மைகளை கண்டுபிடிக்கிறார். அது என்ன? கொலையாளி யார்? முருகா அசோக் ஏன் செய்யாத கொலைகளுக்காக சரணடைந்தார் ? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
முருகா அசோக் வழக்கம்போல உணர்ச்சிகரமான நடிப்பால் அசத்தியுள்ளார். தனது கதாபாத்திரத்துக்கு மிகவும் மெனக்கெட்டிருப்பது நடிப்பில் தெரிகிறது.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ள யுகன், தனது அழுத்தமான நடிப்பால் அலங்கரித்திருக்கிறார். போலீஸ் சீருடைக்கு கச்சிதமாக பொருந்துகிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் சங்கவி மற்றும் நிஷா இருவரும் தங்களது இயல்பான நடிப்பு மற்றும் அழகால் கவர்கிறார்கள். சிமு அத்வானியின் நடிப்பு கலங்கடிக்கிறது.
டாக்டராக ஆர்.அரவிந்தராஜ், நீதிபதியாக ஒய்.ஜி.மகேந்திரன் இருவரும் தங்களது அனுபவ நடிப்பால் அலங்கரித்துள்ளார்கள்.
வி.எஸ்.வேலனின் ஒளிப்பதிவு புதுமை. காதர் இசையில் பாடல்கள் இனிமை. எதார்த்தமான காட்சிகள் படத்துக்கு பலம். திரைக்கதை இன்னும் வேகமாக இருந்திருக்கலாம்.
காதல், பழிவாங்கல் மற்றும் சமூகப் பிரச்சினையை திரைக்கதையில் சரியான முறையில் கையாண்டு, படத்தை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் நெடுமாறன் மோகன்தாஸ். திரில்லர் விரும்பிகளுக்கு நல்ல விருந்து.