மன்னர் வகையறா

குடும்ப மோதலும் ஒரு இளைஞரின் காதலும், "மன்னர் வகையறா" படத்திற்கான சினிமா விமர்சனம்.
மன்னர் வகையறா
Published on

கதையின் கரு: ஊர் பெரிய மனிதர் பிரபுவின் மகன்கள் விமல், கார்த்திக் குமார். வக்கீலுக்கு படித்து தேர்வு எழுதி விட்டு முடிவுக்காக காத்திருக்கிறார், விமல். ஜெயப்பிரகாஷ், சரண்யா பொன்வண்ணன் தம்பதி மகள்கள் ஆனந்தி, சாந்தினி, மகன் வம்சி கிருஷ்ணா. சரண்யா பொன்வண்ணனுக்கும் அவரது அண்ணன் குடும்பத்துக்கும் பகை.

மகள் சாந்தினியை அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து வைத்து குடும்பத்தை ஒற்றுமைப்படுத்த சரண்யா பொன்வண்ணன் முயற்சிக்கிறார். கல்லூரியில் படிக்கும் ஆனந்திக்கும் விமலுக்கும் காதல் மலர்கிறது. சரண்யா பொன்வண்ணனின் அண்ணன் மகன் வைத்திருக்கும் இறால் பண்ணை விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக வழக்கு தொடர்ந்து மூட வைக்கிறார் பிரபு.

இதனால் இரண்டு குடும்பத்தினரும் மோதிக்கொள்கிறார்கள். அப்போது ஏற்கனவே முடிவு செய்தபடி சாந்தினி திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அவர் தனது அண்ணன் கார்த்திக் குமார் காதலி என்பது விமலுக்கு தெரிய வருகிறது. காதல் தோல்வியில் கார்த்திக்குமார் விஷம் குடிக்கிறார். அவரை காப்பாற்றி விட்டு திருமண மண்டபத்தில் புகுந்து சாந்தினியை கடத்தி வந்து அண்ணனுக்கு திருமணம் செய்து வைக்கிறார், விமல்.

இதனால் குடும்பங்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. சாந்தினிக்கு பதில் ஆனந்தியை அண்ணன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்கிறார் சரண்யா பொன்வண்ணன். விமல், ஆனந்தி காதல் என்ன ஆனது? அவர்கள் வாழ்க்கையில் இணைந்தார்களா? என்பது மீதி கதை.

விமல் கதாபாத்திரத்தில் அம்சமாக பொருந்தி இருக்கிறார். காதல், நகைச்சுவையில் வழக்கம்போல் ஜமாய்க்கிறார். கூடுதலாக ஆவேசமாக சண்டையிட்டு ஆக்ஷன் ஹீரோவாகவும் உயர்ந்து இருக்கிறார். குடும்பங்களை சேர்த்து வைக்க செய்யும் தந்திரங்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனந்தி துறுதுறுவென வரும் கலகலப்பான காதலி. விமலை அண்ணன் என்று கலாய்க்கும் காட்சிகளில் ஈர்க்கிறார்.

ஊர் பெரிய மனிதராக பிரபு கம்பீரம். ரோபோ சங்கர் சிரிக்க வைக்கிறார். வம்சி கிருஷ்ணா, கார்த்திக்குமார், ஜெயபிரகாஷ், சாந்தினி, சரண்யா பொண்வண்ணன், நீலிமா ராணி, மீரா கிருஷ்ணன் என்று நிறைய நட்சத்திர பட்டாளம். அனைவரும் கதையில் ஒன்றி இருக்கிறார்கள். மூன்று குடும்பங்களின் பகையை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். நகைச்சுவை, செண்டிமெண்ட், காதல் என்று திரைக்கதையை கலகலப்பாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் பூபதி பாண்டியன். ஜேக்ஸ் பிஜோஸ் பின்னணி இசையும் சுராஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவும் பக்கபலம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com