"மரகதமலை" - சினிமா விமர்சனம்

இயக்குனர் எஸ்.லதா இயக்கிய மரகதமலை படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்
"மரகதமலை" - சினிமா விமர்சனம்
Published on

சென்னை,

பல ஆண்டுகளுக்கு பிறகு குழந்தைகளுக்கான பிரத்யேகமாக உருவாகியுள்ள தமிழ் படம்.

18-ம் நூற்றாண்டில் நடக்கும் இக்கதையில் மரகத மலையின் கீழே வசிக்கும் ஜமீன் குடும்பம் பரம்பரை பரையாக தங்க, வைர ஆபரணங்கள் அடங்கிய பொக்கிஷ புதையலை ரகசிய இடத்தில் வைத்து பாதுகாக்கிறார்கள். எதிர்காலத்தில் வறட்சி என்ற நிலை வந்தால் அந்த புதையல் மக்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்பதற்காக அவற்றை பத்திரமாக பாதுகாக்கிறார்கள்.

அந்தவகையில் சந்தோஷ் பிரதாப் - தீப்ஷிகா தம்பதி, இந்த தலைமுறை ஜமீன் குடும்பமாக இருக்கிறார். இவர்கள் மீது கொள்ளை கூட்டம் தாக்குதல் நடத்தி, புதையல் ரகசியத்தை அறிய திட்டம் போடுகிறது. அதனால் அந்தப் புதையல் பற்றிய ரகசிய வழி வரைபடத்தை மனைவியிடம் கொடுத்து, மனைவியையும் தனது மகனையும் காட்டுக்குள் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு அனுப்பி விடுகிறார் சந்தோஷ் பிரதாப்.

காட்டுக்குள் செல்லும் தீப்ஷிகா ஒரு கட்டத்தில் மகனை பிரிகிறார். மேலும் முனிவர் ஒருவரின் சாபத்துக்கு ஆளாகி சிலையாகி விடுகிறார். சந்தோஷ் பிரதாப் தனது மனைவி, மகனை கண்டுபிடித்தாரா? புதையலை காப்பாற்றினாரா? என்பதே அம்புலி மாமா பாணியிலான கதை.

வில்லன் வேடத்தில் கலக்கி வரும் சந்தோஷ் பிரதாப், இதில் ஊருக்கு நல்லது செய்யும் ஜமீனாக அசத்தியுள்ளார். அவரது உடல்மொழியும், வசன உச்சரிப்பும் கதாபாத்திரத்துக்கு கைகொடுக்கிறது. அழகிலும், நடிப்பிலும் வசீகரிக்கிறார் தீப்ஷிகா. இருவருக்கும் அடுத்தபடியாக சிறுவன் சஷாந்தின் நடிப்பு கவனம் ஈர்க்கிறது. சம்பத் ராம், தம்பி ராமையா, ஜெகன், மகித்ரா, அரிமா வர்மன், கலைக்கோவர்மன் உள்ளிட்ட அனைவருமே நேர்த்தியான நடிப்பை கொடுத்துள்ளனர்.

பி.ஜே.முத்தையாவின் ஒளிப்பதிவும் கண்களுக்கு விருந்தளிக்கிறது. எல்.வி.முத்து கணேஷ் இசை அந்தக்கால காட்சி அமைப்புகளுடன் ஒத்துப்போகிறது. குழந்தைகளை கவர 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்டிருக்கும் புலி, கொரில்லா, ராட்சத பறவை, பாம்பு போன்றவை கவனம் ஈர்க்கிறது. குறிப்பாக டிராகன் வரும் காட்சிகளில் சிலிர்ப்பு.

'மேஜிக்' நிறைந்த கொண்டாட்ட காட்சிகள் பலம். 'லாஜிக்' மீறல்கள் இருக்கிறது. அதிரடி, ஆக்‌ஷன் என பழக்கப்பட்ட கண்களுக்கு, குழந்தைகள் கொண்டாடும் வகையில் ஒரு அலாதியான படைப்பை கொடுத்திருக்கும் இயக்குனர் எஸ்.லதாவை பாராட்டலாம். கிளைமேக்ஸ் பாடல் காட்சி சிலிர்ப்பு.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com