மார்க் ஆண்டனி - சினிமா விமர்சனம்

மார்க் ஆண்டனி - சினிமா விமர்சனம்
Published on

மெக்கானிக் வேலை பார்க்கும் விஷால் தனது தாய் மரணத்துக்கு இறந்துபோன தந்தைதான் காரணம் என்று நினைக்கிறார். டைம் டிராவல் போன் ஒன்று விஷாலிடம் கிடைக்கிறது. அதன் மூலம் கடந்த காலத்துக்கு சென்று அப்பா நல்லவர் என்பதையும் அவரது மரணத்துக்கு நண்பரான எஸ்.ஜே.சூர்யா காரணம் என்றும் அறிகிறார். தந்தையை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார். அதற்கு எஸ்.ஜே.சூர்யாவின் மகனால் தடைகளும் ஆபத்தும் வருகிறது. அதில் இருந்து அப்பா விஷாலும் மகன் விஷாலும் தப்பினார்களா? என்பது கதை. இரட்டை வேடத்தில் நடித்துள்ள விஷாலுக்கு மைல் கல் படம்.

அப்பா விஷால் வீராதி வீரனாக மிரட்டுகிறார் என்றால் மகன் விஷால் அடிதடி வம்புக்கு போகாமல் காதலியை உருகி உருகி காதலிக்கிறார். இரண்டு வேடத்துக்கும் நூறு சதவீதம் நியாயம் செய்திருக்கிறார். இப்படியொரு விஷாலை தமிழ் சினிமா பார்த்ததில்லை என்ற அளவுக்கு அர்ப்பணிப்பையும் ஆர்ப்பரிக்கும் நடிப்பையும் அருமையாக வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்துகிறார். வில்லன் கதாபாத்திரத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மகனாக வரும் எஸ்.ஜே.சூர்யா பதுங்கி பாயும் புலி என்றால் அப்பாவாக வரும் எஸ்.ஜே.சூர்யா சிறுத்தையாக பாய்ந்திருக்கிறார். சில்க் சுமிதாவை சந்திக்குபோது அவர் அனுபவிக்கும் விரகதாப காட்சிகளில் தியேட்டர் சிரிப்பலையில் மூழ்குகிறது.

நாயகி ரீதுவர்மா, அபிநயா, ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன் ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர். சுனில் தனித்துவமான நடிப்பால் கவனிக்க வைத்துள்ளார். செல்வராகவன் வேடம் மனதில் நிற்கிறது.

ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் ஒவ்வொன்றையும் ரசிகர்கள் கொண்டாடுமளவுக்கு தெறிக்க விட்டிருக்கிறார். பின்னணி இசையிலும் இறங்கி வேலை செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமனுஜம் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் வேறுபடுத்தி காட்டி வியக்க வைக்கிறார். இரட்டை அடுக்கு பஸ்ஸில் நடக்கும் சண்டை காட்சி, ஆய்வகம், விஷாலின் மாளிகை என ஒவ்வொரு இடங்களிலும் ஸ்கோர் செய்துள்ளார்.ஆரம்ப காட்சிகளில் சிறிய குழப்பம் வந்தாலும் டைம் டிராவல் கதை என புரிந்ததும் சுவாரசியம் தொற்றிக்கொள்கிறது.

பழங்காலத்தின் வாழ்க்கை முறை, ஆய்வகம் என படம் அட்டகாசமாக ஆரம்பமாகிறது. அந்த வேகமும் சுவாரசியமும் படம் முழுவதையும் கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். லாஜிக் பார்க்காமல் மேஜிக் நிகழ்த்த வேண்டும் என்ற முயற்சியில் வென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com