மெமரீஸ்: சினிமா விமர்சனம்

மெமரீஸ்: சினிமா விமர்சனம்
Published on

கதாநாயகன் வெற்றி தன்னை கொலை செய்ய துரத்துகிறார்கள் என்று போலீஸ் நிலையத்தில் அபயம் தேடி வருகிறார். இன்னொரு பக்கம் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் கொலை செய்யப்படுகிறார்கள்.

கொலையாளி யார் என்பதை கண்டறிவதில் போலீஸ் திணறுகிறது.

வெற்றியை கொலை செய்ய துரத்துவது யார் அப்பாவி குடும்பம் ஏன் கொலை செய்யப்படுகிறது என்பதை வழக்கமான பாணியில் சொல்லாமல் கொலை செய்தவனை வைத்தே அந்த கொலைகளை கண்டுபிடிப்பது என வித்தியாசமான திரைக்கதையில் சொல்வதுதான் மெமரீஸ்.

கதையில் வரும் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். நினைவு இழந்தவர், டாக்டர், போலீஸ் அதிகாரி என பல கெட்டப்களில் வரும் வெற்றி அசத்தலான நடிப்பில் கவர்கிறார்.

பார்வதி அருண், டயனா கமீஸ் ஆகிய இருவரும் சில காட்சிகள் வந்தாலும் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

போலீஸ் அதிகாரியாக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர், நண்பராக வரும் ரமேஷ் திலக் என அனைவரும் தங்கள் பொறுப்பை சரியாக செய்து கதைக்கு வலிமை சேர்த்து உள்ளனர். மனநல டாக்டராக வரும் ஹரிஷ் பேரேடி கிளைமாக்சில் திருப்பம் கொடுத்துள்ளார்.

கதை, காட்சியின் தன்மையை சிதைக்காதபடி பொருத்தமான பின்னணி இசை அமைத்திருக்கிறார் கவஸ்கார் அவினாஷ். காடு, மேடு என பயணித்துள்ள அர்மோ, கிரணின் கேமரா படத்துக்கு தேவையான காட்சிகளை நன்றாக படம்பிடித்துள்ளது.

சான் லோகேஷின் எடிட்டிங் கதையை வேகமாக நகர்த்துகிறது. அஜயன் பாலாவின் வசனங்கள் கதைக்கு பலம் சேர்க்கிறது.

கதைக்குள் கதை, கதாபாத்திரங்கள் என்று பரபரப்பாக நகரும் காட்சிகளை வெகு ஜனமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லி இருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும்.

சில இடங்களில் காட்சிகள் சீட் நுனிக்கு இழுக்கும் திகிலை தருகின்றன. ஒருவரின் நினைவை அழித்துவிட்டு வேறு ஒரு நினைவை பொருத்த முடியும் என்ற வித்தியாசமான கருவில் சைக்கோ திரில்லர் கதையை போரடிக்காமல் விறுவிறுப்பான திரைக்கதையில் படமாக்கி கவனிக்க வைக்கிறார்கள் இயக்குனர்கள் ஷியாம், பிரவீன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com