மெர்க்குரி - திரை விமர்சனம்

மெர்க்குரி - திரை விமர்சனம்
மெர்க்குரி - திரை விமர்சனம்
Published on


கமல்ஹாசன் நடித்த பேசும் படம் படத்துக்குப்பின் வசனமே இல்லாமல், பேசாத படைப்பாக வெளிவந்திருக்கும் மவுன படம். முற்றிலும் புதுமுகங்களே நடித்து இருக்கிறார்கள்.

மலைகள் சூழ்ந்த ஒரு காட்டுப் பகுதியில் உள்ள ரிசார்ட்டில், ஒரு தோழியின் பிறந்த நாளை அவளுடைய 4 நண்பர்கள், இரவு நேரத்தில் கொண்டாடுகிறார்கள். மது அருந்திக் கொண்டே ஆங்கில இசைக்கேற்ப ஆட்டம் அமர்க்களப்படுகிறது. போலீஸ் வந்து கதவை தட்டுகிறது. நண்பர்களில் ஒருவன் அரசியல் செல்வாக்கு உள்ளவன். அதனால், இசைக்கருவிகளின் சத்தத்தை குறைத்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, போலீஸ் போய் விடுகிறது. நண்பர்களில் ஒருவன், பிறந்த நாள் கொண்டாடும் பெண் மீது காதல்வசப்படுகிறான். அவளும் அவனை காதலிக்க-காதல் ஜோடி அந்த நள்ளிரவு நேரத்தில், லாங் டிரைவ் போகிறார்கள். அவர்களுடன் பாதி வழியில், மற்ற மூன்று நண்பர்களும் சேர்ந்து கொள்கிறார்கள்.

காரை ஓட்டுகிற காதலியிடம் காதலன் சில்மிஷம் செய்ய-கார் தாறுமாறாக ஓடி, கண்பார்வையற்ற பிரபுதேவா மீது மோதுகிறது. சம்பவ இடத்திலேயே பிரபுதேவா மரணம் அடைய-அவருடைய உடலை நண்பர்கள் குழு கார் டிக்கியில் ஏற்றி, ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் தூக்கி வீசுகிறார்கள். அப்போது காரில் அமர்ந்திருந்த தோழி காணாமல் போகிறாள். அவளுடைய உருவம் பக்கத்தில் உள்ள ஒரு பழைய கட்டிடத்துக்குள் தெரிகிறது. தோழியை காப்பாற்ற நண்பர்கள் 4 பேரும் அந்த கட்டிடத்துக்குள் நுழைகிறார்கள். அவர்கள் தோழியை காப்பாற்றினார்களா, அவளை கடத்திச் சென்றது யார்? என்ற கேள்விகளுக்கு திகிலாக பதில் அளிக்கிறது, மெர்க்குரி.

கதை சம்பவங்கள் முழுவதும் ஒருநாள் இரவில் நடக்கிறது. இளைஞர்களும், அவர்களின் தோழியும் சகலமும் மறந்து இசைக்கேற்ப ஆடும்போதே என்னவோ நடக்கப் போகிறது என்று யூகிக்க முடிகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் கார் சீறிப்பாய்ந்து செல்லும்போதும், ரத்த வெள்ளத்தில் பிரபுதேவாவின் உடல் கிடப்பதை காட்டும்போதும், பதற்றம் கூடுகிறது. அந்த பழைய கட்டிடமும், அதற்குள் இருக்கும் எந்திரங்கள் மற்றும் தளவாடங்களும் பிரபுதேவாவுடன் சேர்ந்து பயமுறுத்துகின்றன.

பிரபுதேவாவின் உடல் அந்த கட்டிடத்துக்குள் இருப்பதும், நண்பர்கள் மற்றும் தோழியை ரத்த காட்டேரி போல் பிரபுதேவா விரட்டுவதும், திடுக் திருப்பங்கள். இடைவேளைக்குப்பின், ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. ஒருவர் பின் ஒருவராக நண்பர்களை கொன்று தொங்க விடுவது, திகிலின் உச்சம்.

பிரபுதேவா கொடூரமான கொலை காரராக வருகிறார். சனந்த், தீபக் பரமேஷ், அனிஸ் பத்மன், ஷசாங் புருசோத்தமன் ஆகியோர் நண்பர்களாகவும், இந்துஜா தோழியாகவும் நடித்து இருக்கிறார்கள். படத்தின் உண்மையான கதாநாயகர்கள் ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசுவும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும்தான். ஒளிப்பதிவும், பின்னணி இசையும் கைகோர்த்துக் கொண்டு மிரட்டியுள்ளன. கதை சொன்ன விதத்தில், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜுக்கு, திகில் பட மன்னன் என்று பட்டமே கொடுக்கலாம்.

மெர்க்குரியை மவுன படமாக்கியது ஏன், வசனத்தை தவிர்த்திருப்பது எந்த விதத்தில், இந்த படத்துக்கு சிறப்பு சேர்க்கிறது? என்ற கேள்விகள், எழாமல் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com