மைக்கேல் : சினிமா விமர்சனம்

மைக்கேல் : சினிமா விமர்சனம்
Published on

குழந்தைப் பருவத்தில் தாயை பறி கொடுத்தவர் சந்தீப் கிஷன். வாலிப வயதை அடைந்ததும் தன் தாய்க்கு துரோகம் செய்த தந்தையை பழிவாங்க துடிக்கிறார்.

மும்பையை கலக்கும் பிரபல தாதா கவுதம் மேனனை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார் சந்தீப் கிஷன். பிறகு அவரிடமே அடியாளாக வேலைக்கும் சேர்கிறார்.

தன்னை கொலை செய்ய திட்டமிட்டவர்களை தீர்த்து கட்டும் பொறுப்பை சந்தீப் கிஷனிடம் ஒப்படைக்கிறார் கவுதம் மேனன்.

இந்த போராட்டத்தில் நாயகி திவ்யான்ஷாவுடன் சந்தீப் கிஷனுக்கு காதல் மலர்கிறது. ஒரு கட்டத்தில் திவ்யான்ஷா, சந்தீப் கிஷனை சுட்டு தள்ளுகிறார். தாதா தரப்பில் இருந்தும் அவருக்கு ஆபத்து வருகிறது.

மயிர் இழையில் உயிர்தப்பிக்கும் சந்தீப் கிஷன் தன்னுடைய எதிரியான தாதாவை தீர்த்த கட்ட திட்டமிடுகிறார்.

சந்தீப் கிஷனின் காதலி ஏன் துப்பாக்கி சூடு நடத்துகிறார், தாதாவுக்கும் சந்தீப்புக்குமிடையே பகை உருவாக காரணம் என்ன, அப்பாவை பழி தீர்க்க நினைத்த சந்தீப் கிஷனின் முயற்சி என்னவானது என்பது மீதி கதை.

முகத்தில் கோபம் கொப்பளிக்கும் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருகிறார் சந்தீப் கிஷன். கட்டு மஸ்தான உடற்கட்டு, உடல் மொழி என கேரக்டருக்கு நியாயம் செய்து இருக்கிறார். சண்டை காட்சிகளில் பொறி கிளப்புகிறார்

நாயகி திவ்யான்ஷா அழகாக இருக்கிறார். கவுதம்மேனன் வழக்கம் போல் டிப்டாப் உடை அணிந்து, அளந்துப் பேசி, அளவாக நடித்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் ரசிகர்களின் மொத்த கவனத்தையும் ஈர்த்து விடுகிறார் விஜய் சேதுபதி.

வரலட்சுமிக்கு தில் ரோல். அதில் தூள் கிளப்பி இருக்கிறார்.

ஆக்ஷன் படத்துக்குரிய பரபரப்பான இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். ஒளிப்பதிவாளர் கிரண் கெளசிக் கேமரா கோணங்கள் கதையை வேகமாக நகர்த்த உதவியுள்ளது. வேகமாக செல்லும் கதையில் இடை செறுகலாக வரும் காதல் காட்சிகள் தடைபோடுகின்றன

அம்மா மகன் சென்டிமெண்ட் பின்னணியில் பழிவாங்கல் அதிரடி கதையை விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com