“மிராய்” - சினிமா விமர்சனம்

கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்துள்ள ‘மிராய்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
கலிங்கத்து போரில் வெற்றிபெற்ற அசோக மன்னர், தன்னால் ஏற்பட்ட பேரழிவுக்கு மனம் வருந்துகிறார். தன்னிடம் உள்ள சக்திகளை 9 புத்தகங்களில் அடக்கி வைக்கிறார். பல யுகம் கடந்த நிலையில், மனோஜ் மஞ்சு அந்த புத்தகங்களை கைப்பற்றி சாகாவரம் பெற நினைக்கிறார். இதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் ஸ்ரேயா, அகத்தியர் வாக்கின்படி உலகை காப்பாற்ற தனது மகனை வாரணாசியில் அனாதையாக விடுகிறார். அதன்படி தேஜா சஜ்ஜா ஆதரவின்றி வளருகிறார்.
9-வது புத்தகத்தை வில்லன் அடைய வரும் போது, ராமரின் ஆயுதமான மிராயை அடைந்து வில்லனை அழிக்க வேண்டும் என்பது விதி. இந்த உண்மை தேஜா சஜ்ஜாவுக்கு தெரியவரும்போது அதிர்ந்து போகிறார். தேஜா சஜ்ஜா மிராயை அடைந்தாரா? 9-வது புத்தகத்தை காப்பாற்றினாரா? வில்லனை அழித்தாரா? என்பதே பரபரப்பான மீதி கதை.
'ஹனுமான்' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு சாகச கதையில் அசத்தியுள்ளார் தேஜா சஜ்ஜா. தனது எல்லைக்குட்பட்டது எதுவோ, அந்த விஷயங்களில் கலக்கி 'ஸ்கோர்' செய்துள்ளார். ஹீரோவை காதலிப்பது தான் வேலை என்ற இலக்கணத்தை மாற்றி, கதாநாயகியாக நடிப்பிலும் கவனிக்க வைத்திருக்கிறார் ரித்திகா.
ஆஜானுபாகுவாக இருக்கும் மனோஜ் மஞ்சு வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். புத்தகங்களில் உள்ள சக்தியை அடைய எந்த எல்லைக்கும் செல்லும் அவரது போக்கு பயமுறுத்துகிறது. எதிர்பார்த்தது 'மிஸ்ஸிங்' என்றாலும், ஸ்ரேயாவின் அனுபவ நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஜெகபதி பாபு, ஜெயராம் என அனைவரது நடிப்பிலும் எதார்த்தம். கவுரா ஹரி இசையில் இரைச்சலே மேலோங்கி இருக்கிறது.
மயிர்கூச்செரியும் கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் பலம். புத்தகங்கள் அடைவதில் உள்ள சவால்களை எளிதாக கடந்துவிடுவது எதிர்பார்ப்பை குறைக்கிறது. முன்கூட்டியே யூகித்து விடும் காட்சிகள் பலவீனம். 'ஹாலிவுட்' படங்களின் சாயல் 'லைட்'டா இருக்கே...
மாயாஜால உலகில் நம்மை பயணிக்க செய்து இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் வித்தை காட்டியுள்ளார், கார்த்திக் கட்டம்னேனி.
மிராய் - 'லாஜிக்' இல்லா 'மேஜிக்'.






