மிரள்: சினிமா விமர்சனம்

எங்கும் இருள், மனதை கவ்வும் பயம். ஒருவர் கொல்லப்படுகிறார். கொலையாளி யார், கொலைக்கான காரணம் என்ன? என்பது கதை.
மிரள்: சினிமா விமர்சனம்
Published on

கட்டடம் கட்டும் பொறியாளர் பரத். அவருடைய மனைவி வாணிபோஜன். அவர்களுக்கு ஒரு குழந்தை. மகிழ்ச்சியான அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஒரு சம்பவத்தால் அமைதி தொலைகிறது. வாணிபோஜனுக்கு திகில் கனவுகள் வருகிறது. அச்சம் நிலவுகிறது. மன நிம்மதி தேடி கிராமத்தில் இருக்கும் குலதெய்வத்தை வணங்க மாமனார் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டுக்கு குடும்பத்துடன் செல்கிறார் பரத். அங்கு பரத் தம்பதியரின் நிம்மதி தொலைந்து போனதற்கான காரணம் தெரிய வருகிறது. குடும்பத்துடன் ஊருக்கு திரும்பும்பொது காட்டுக்குள் மாட்டிக் கொள்கின்றனர். பரத் குடும்பத்தை ஒருவர் கொல்ல முயற்சிக்கிறார்.

குடும்பத்தை காப்பாற்றினாரா? பரத் குடும்ப வாழ்க்கையில் புயலை கிளப்பியவர் யார்? முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் கொலையாளி யார்? போன்ற முடிச்சுகளை லாவகமாக அவிழ்க்கிறது படம். நிறைய படங்களில் காதலனாக பார்த்த பரத் இதில் பொறுப்பான குடும்ப தலைவர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக இருக்கிறார். பாசம், பரிதவிப்பு, கோபம் என அத்தனை உணர்வுகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி உள்ளார்.

மனைவி, குழந்தைகள் தொலைந்துப்போகும் காட்சிகளில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். வாணிபோஜன், தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாகப் பயன்படுத்தி, சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஊர் பெரியவராக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் நல்ல தேர்வு. அலட்டல் இல்லாத அனுபவ நடிப்பில் அசத்துகிறார். ராஜ்குமாரும் கதாபாத்திரத்தில் நிறைவு. திகில் படம் என்பதால் சவுண்ட்மட்டும் கொடுத்து பயமுறுத்தாமல் வித்தியாசம் காட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் பிரசாத். பாடல்கள் இல்லாத படத்துக்கு இவரின் பின்னணி இசைதான் முழுமையாக உயிர் கொடுத்துள்ளது.

சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு படத்துக்கு உதவியுள்ளது. காற்றாலை காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் அருமை. திகில் கதையில் இன்னும் கூடுதலாக பயமுறுத்தும் விஷயங்களை சேர்த்து இருக்கலாம். பெரும்பாலான தமிழ் சினிமாக்களைப்போல திரைக்கதை எழுதாமல் காட்சிகள், கேமரா, சவுண்ட் மிக்ஸிங், எடிட்டிங் எனத் தொழில்நுட்பத்தையும் சேர்த்து எழுதியிருப்பதில் இயக்குநர் சக்திவேலின் பலம் தெரிகிறது. எதிர்பாராத திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து, அளவான வசனங்கள் பேசி மிரள வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com