சினிமா விமர்சனம்: கோப்ரா

கணித அறிவை வைத்து தடயமே இல்லாமல் கொலைகள் செய்யும் சர்வதேச கொலைகாரனுக்கும் அவனைத் தேடும் இன்டர்போல் அதிகாரிக்கும் நடக்கும் யுத்தமே `கோப்ரா'.
சினிமா விமர்சனம்: கோப்ரா
Published on

விக்ரம் ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படம். ஒரே சாயல் கொண்ட அண்ணன்-தம்பி கதை.

மதி, கதிர் இருவரும் அண்ணன்-தம்பி. மதி சிறுவனாக இருக்கும்போதே கணக்கு பாடத்தில் அதிக மார்க் வாங்குபவன். பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றவன். கதிர், துணிச்சல் மிகுந்தவன்.. அம்மாவின் சாவுக்கு காரணமான போலீஸ் அதிகாரியை குத்தி கொலை செய்கிறான்.

ஒரு கட்டத்தில் அண்ணன்-தம்பி இருவரும் பிரிய நேர்கிறது. மீண்டும் அவர்கள் சந்திக்கும்போது வாலிபம் வந்து விடுகிறது. மதி தன் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி, எந்த தடயமும் இல்லாமல் கூலிக்கு கொலை செய்கிறான். அதில் கிடைக்கும் பணத்தை ஆதரவற்றோர் ஆசிரமத்துக்கு கொடுக்கிறான். 

இருவரின் வாழ்க்கையில், ரிஷி என்ற வில்லன் குறுக்கிடுகிறான் மதி, கதிர் ஆகிய இரண்டு பேர்களையும் கொலை செய்ய சதி செய்கிறான். அவனிடம் மாட்டிக்கொண்ட அண்ணனும், தம்பியும் என்ன ஆகிறார்கள்? என்பது மீதி கதை.

விக்ரமுக்கு பலவித தோற்றங்கள் புதுசு அல்ல. இரட்டை வேடம், புதுசு. அண்ணன்-தம்பியாக இரண்டு வேடங்களில் வருகிறார். நடிப்பிலும், தலை முடி, மூக்கு கண்ணாடி போன்ற அலங்காரத்திலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார். 

காதல் காட்சிகளில் கவித்துவம் காட்டுபவர், சண்டை காட்சிகளில் சாகசங்களை நிகழ்த்தியிருக்கிறார். குறிப்பாக அந்த கொல்கத்தா கோபுர சண்டை காட்சியில் அவருடைய துணிச்சல், விய(ர்)க்க வைக்கிறது.

விக்ரம் மீது தீவிர மோகம் கொண்ட காதலியாக ஸ்ரீநிதி செட்டி, கவனம் ஈர்க்கிறார். இவருக்கு போட்டியாக மீனாட்சி, மிர்ணாளினி ஆகிய 2 கதாநாயகிகள் இருக்கிறார்கள். ரோபோ சங்கருக்கு குணச்சித்ர வேடம்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள், சுகமான ராகங்கள். அஜய் ஞானமுத்து டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் ஆரம்ப காட்சிகள் பிரமிப்பூட்டுகின்றன என்றாலும், கதையோடு ஒன்றவில்லை.. இடைவேளை வரை இப்படியான சில காட்சிகள் கடந்து போகின்றன. இடைவேளைக்குப்பின், படத்தில் வேகமும் இருக்கிறது. விவேகமும் இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com