

அரசுப்பணிக்கான தேர்வில் நடந்து வரும் முறைகேடுகளை தடுக்க துடிக்கிறார் துஷாரா விஜயன். இதற்கு புதிதாக அந்த ஊருக்கு வரும் டி.எஸ்.பி. அதிதி பாலனும் உடந்தையாக இருப்பார் என்று சந்தேகப்படுகிறார்.
இதையடுத்து டி.எஸ்.பியாக பொறுப்பேற்க வரும் அதிதி பாலனை, துஷாரா விஜயன் கடத்துகிறார். அதிதி பாலனாக தானே டி.எஸ்.பி.யாகவும் பொறுப்பேற்றுக் கொள்கிறார். அரசு தேர்வு மோசடியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
அதிதி பாலன் மூலமாக அந்த மோசடி நடக்க இருப்பதாக நினைத்து அவரை கடத்தி வைத்திருக்கும் துஷாரா விஜயனுக்கு, அவருக்கும் மேலே ஒருவர் இருப்பது தெரியவருகிறது. இதில் காவல்துறை, அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது தெரியவருகிறது.
அந்த முக்கியப்புள்ளி யார்? அவர் மூலம் நடக்க இருக்கும் மோசடியை துஷாரா விஜயன் கண்டுபிடித்தாரா? துஷாரா விஜயன் பின்னணி போலீசாருக்கு தெரிந்ததா? என்ற பல கேள்விகளுக்கும் விடை தரும் பயணமே, 'எக்ஸாம்'.
துஷாரா விஜயனின் அழுத்தமான நடிப்பு அசர வைக்கிறது. திறமை இருந்தும், தன்னால் அரசுத்தேர்வில் வெற்றிபெற முடியவில்லையே என்று ஏங்கும் இடங்களில் எதார்த்தமான நடிப்பை அள்ளி கொட்டியுள்ளார்.
பணம் இருந்தால் எதையும் குறுக்கு வழியில் சாதிக்க முடியும் என்ற கதாபாத்திரத்தில் அதிதி பாலன் அலங்கரித்துள்ளார். எமோஷனல் காட்சிகளும் முன்னேறி விட்டார்.
அப்பாசின் நடிப்பில் அனுபவம் பளிச்சிடுகிறது. நரேன் மணி, துரை சுதாகர் என அனைவரின் நடிப்பிலும் எதார்த்தம் தெரிகிறது.
அருண் அமரேந்திரன் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ். இசையும் காட்சிகளை பரபரப்பான நகர்த்த உதவி இருக்கிறது. பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம். சில காட்சிகளை யூகிக்க முடிகிறது.
நடுத்தர மக்களின் வாழ்க்கை பயணத்தில் அரசுப்பணி என்பதன் முக்கியத்துவம் என்ன? அதற்காக உழைக்கும் அவர்களது உழைப்பு, அதிகார வர்க்கத்தினரால் எப்படி திருடப்படுகிறது? என்பதை சாட்டையடி காட்சிகள் நிறைந்த படமாக இயக்கி, மோசடி பேர்வழிகளுக்கு குட்டு வைத்திருக்கிறார், இயக்குனர் சற்குணம்.