சினிமா விமர்சனம்: பட்டத்து அரசன்

சினிமா விமர்சனம்: பட்டத்து அரசன்
Published on

கபடி விளையாட்டை மையமாக வைத்து வந்துள்ள படம். ராஜ்கிரண் சுற்று வட்டாரத்தில் புகழ்பெற்ற முன்னாள் கபடி வீரர். அவருக்கு சிலை வைத்து ஊர் மக்கள் மரியாதை செய்கிறார்கள். ராஜ்கிரணை விட்டு அவரது மருமகள் ராதிகாவும், பேரன் அதர்வாவும் குடும்ப தகராறில் விலகி இருக்கிறார்கள். ராஜ்கிரணின் இன்னொரு பேரன் ராஜ் ஐயப்பன் கபடி வீரர். எதிர் அணியிடம் பணம் வாங்கிக்கொண்டு தங்கள் ஊர் அணியை தோற்க வைத்துவிட்டதாக ராஜ்கிரணின் விரோதியான ரவிகாளே குடும்பம் ராஜ் ஐயப்பன் மீது பழி சுமத்துகிறது. ஊர் பஞ்சாயத்து ராஜ்கிரண் குடும்பம் இனிமேல் கபடி விளையாடக்கூடாது என்று ஒதுக்கி வைக்கிறது. பழியை தாங்க முடியாத ராஜ் ஐயப்பன் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் நிலைகுலைந்துப் போகிறது ராஜ்கிரண் குடும்பம். தலை குனிந்த தன் தாத்தாவின் தலையை நிமிரச் செய்யவும், தன்னுடைய தம்பி நிரபராதி என நிரூபிக்கவும் அதர்வா களத்தில் இறங்குகிறார். அவருடைய முயற்சிக்கு பலன் கிடைத்ததா, இல்லையா என்பது மீதிக் கதை.

கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்துக்கு அழகாக பொருந்துகிறார் அதர்வா. வெறுப்பு காட்டும் குடும்பத்தினர் மீது பாசம், துடிப்பான சண்டை, காதல் என அனைத்து ஏரியாக்களிலும் ஏறி விளையாடியுள்ள அதர்வாவின் நடிப்பு அபாரமாக உள்ளது. ராஜ்கிரண் நடிக்கவே வேண்டாம் என்பது மாதிரி கண்கள், புருவம், தாடி, மீசை, நடை, உடை என எல்லாமே அவருடைய கதாபாத்திரத்தில் அழுத்தமாக வெளிப்பட்டு உள்ளது. சிங்கம்புலி வழக்கமான பாணியில் சிரிக்க வைக்கிறார். நாயகி ஆஷிகா ரங்கநாத்துக்கு வாய்ப்பு குறைவு என்றாலும் நடிப்பில் குறை இல்லை. ராதிகா, ஜெயபிரகாஷ், துரை சுதாகர், ஆர்.கே.சுரேஷ், ஜி.எம்.குமார், பாலசரவணன், சத்ரு, ரவிகாளே, ராஜ் ஐயப்பன் என அனைவருமே கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.

லோகநாதன் சீனிவாசனின் கேமரா தஞ்சை மண்ணை அப்படியே படம்பிடித்திருப்பது அழகு. ஜிப்ரான் இசையில் 'ஏகப்பட்ட மேகம்', 'அஞ்சனத்தி' பாடல் சுக ராகங்கள். பின்னணி இசையும் கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவியுள்ளது.

பிற்பகுதியில் ராஜ்கிரண் குடும்பம் வறுமையில் தள்ளப்படுவதாக வரும் காட்சிகள் கதையில் ஒட்டவில்லை. அன்பு, பாசம், உறவுகள், சச்சரவு, மோதல் என்று திரைக்கதையை கிராமிய வாசனையோடு விறுவிறுப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் சற்குணம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com