சினிமா விமர்சனம்: "மேட் இன் கொரியா"

இயக்குனர் ரா.கார்த்திக் இயக்கியுள்ள "மேட் இன் கொரியா" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சினிமா விமர்சனம்: "மேட் இன் கொரியா"
Published on

சென்னை,

பள்ளி பருவத்திலேயே கொரியா நாட்டு இசை மற்றும் நடனத்தால் ஈர்க்கப்படும் பிரியங்கா மோகன், வாழ்க்கையில் ஒரு தடவையாவது கொரியாவுக்கு சென்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். கொரியாவுக்கு செல்ல வேண்டும் என்று உறுதியுடன் பயணிக்கும் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் காதலையும் சந்திக்கிறார். ஆனாலும் தன் ஆசையை விடாமல் துரத்துகிறார்.

இதற்கிடையில் அவருக்கு கொரியாவுக்கு செல்வதற்கான ஒரு வாய்ப்பு தற்செயலாக அமைகிறது. சந்தோஷத்துடன் கொரியா செல்லும் அவர் அங்கு மிகப்பெரிய ஏமாற்றங்களை சந்திக்கிறார். மீண்டும் தாய்நாட்டுக்கு செல்ல துடிக்கிறார்.

புரியாத மொழி, தெரியாத மக்கள் என பயணிக்கும் பிரியங்கா மோகனின் வாழ்வில் கொரியா பயணம் எத்தகைய மாற்றங்களை உண்டாக்குகிறது? பிரியங்கா மோகன் மீண்டும் நாடு திரும்ப என்ன செய்தார்? என்பதே மீதி கதை.

அளவான நடிப்பால் மொத்த கதையையும் தூக்கி சுமந்துள்ளார் பிரியங்கா மோகன். மகிழ்ச்சி, சோகம், ஏமாற்றம், விரக்தி, தன்னம்பிக்கை என அனைத்து பரிமாணங்களையும் நடிப்பில் காட்டி வியக்க வைத்துள்ளார். அவரது எதார்த்தமான நடிப்பு படத்தை தாங்கி பிடித்துள்ளது. பிரியங்கா மோகனின் காதலராக வரும் ரிஷிகாந்த், அழுத்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். இந்தப் படம் அவரது திரைப் பயணத்தில் முக்கியமான படமாக அமையும்.

பார்க் ஹேஜின், நோஹூ ஜின், ஜாங் ஜேஹியான் என கொரிய நாட்டு நடிகர்-நடிகைகளும் கலக்கியுள்ளனர். இதர நடிகர்-நடிகைகளும் நேர்த்தியாக நடித்துள்ளனர். பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவில் கொரியா நாட்டின் அழகு கண்களுக்கு விருந்து. ஹேஷாம் அப்துல் வஹாப் இசை இதமாகவும், இனிமையாகவும் படத்தை கடத்துகிறது.

எதார்த்தம் நிறைந்த காட்சிகள், நடிகர்-நடிகைகளின் நடிப்பு படத்துக்கு பெரும் பலம். திரைக்கதை மெதுவாக நகருகிறது.

சாதாரண கதைக்களம் தான் என்றாலும், அதில் மெய்சிலிர்க்கும் காட்சிகளை சுழலவிட்டு, ரசிகர்களின் இதயங்களை இதமாக தொட்டு பார்த்துள்ளார் இயக்குனர் ரா.கார்த்திக்.

கிளைமேக்ஸ் வருடல்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com