“முஸ்தபா முஸ்தபா” - சினிமா விமர்சனம்

பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ் நடித்துள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
“முஸ்தபா முஸ்தபா” - சினிமா விமர்சனம்
Published on

டி.வி. சேனலில் வேலை பார்க்கும் சதீசும், டாக்டரான மோனிகாவுக்கும் காதல் மலர்கிறது. இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் பச்சைக்கொடி காட்ட, திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகிறது. இல்லற வாழ்வில் இருவரும் இணைய கனவு காண்கிறார்கள். திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் ஒரு பெண்னுடன் சதீஷ் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகிறது.

இந்த தகவலை அறிந்து கொண்டு அதிர்ச்சி அடையும் சதீஷ், யாருக்கும் தெரியாமல் அந்த வீடியோவை நீக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அங்கு அவருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. அந்த வீடியோவின் பின்னணி என்ன? அதை யார், எதற்காக இணையத்தில் பதிவேற்றினார்கள் ? என்பதை கலகலப்பாக சொல்லும் முயற்சி தான் 'முஸ்தபா முஸ்தபா' படத்தின் கதை.

கலகலப்பான வேடம் என்றால் சதீசுக்கு சொல்லவா வேண்டும், கலக்கி இருக்கிறார். காதலியிடம் காதல், மோதல் என கலாட்டா செய்யும் சதீஷ், திருமண சமயத்தில் வெளியான வீடியோவை நீக்க எடுக்கும் முயற்சிகள் கலகலப்பின் உச்சம். மோனிகா சின்னகோட்லா அழகால் வசீகரிக்கிறார். கொஞ்சலான அவரது நடிப்பு இளசுகளின் இதயங்களை பஞ்சராக்குகிறது.

சதீஷின் நண்பராக வரும் சுரேஷ் ரவி, தனது வேலையை குறையின்றி செய்திருக்கிறார். கருணாகரன், வழக்கம் போல் தனது டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைக்கிறார். மானசா சவுத்ரி, சாம்ஸ், லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்பிரமணி என அனைவரது நடிப்பிலும் நிறைவு.

கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவும், எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது. கலகலப்பான காட்சிகள் படத்துக்கு பலம். இரண்டாம் பாதியில் சற்று தடுமாறி இருக்கிறார்கள்.

சாதாரண கதையை வைத்து கலகலப்பான காட்சிகள் மூலம் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் பிரவீன் சரவணன்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com