

கதையின் கரு: தமிழ் சினிமாவில், இதுவரை வீடுகள் மற்றும் பாழடைந்த பங்களாவுக்குள் அட்டகாசம் செய்து வந்த பேய், முதல் முறையாக ஒரு சினிமா தியேட்டருக்குள் இருந்து கொண்டு மிரட்டுகிறது.
சித்தாராவின் மகன், ஆரி. வாய் பேச முடியாத மகள், அதுல்யா. இவருக்கு திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. மாப்பிள்ளை வீட்டார் நிறைய நகையும், அதிக வரதட்சணையும் கேட்கிறார்கள்.
சித்தாரா-ஆரி குடும்பத்தின் பூர்வீக சொத்து, நாகேஷ் திரையரங்கம் என்ற சினிமா தியேட்டர். அதுல்யாவின் திருமணத்துக்காக அந்த தியேட்டரை விற்க முடிவு செய்கிறார்கள். இதற்காக ஆரி தனது நண்பர் காளி வெங்கட்டுடன் தியேட்டர் இருக்கும் கிராமத்துக்கு போகிறார். அங்கே, அந்த தியேட்டருக்குள் பேய் இருக்கிறது...உள்ளே போகாதே என்று உறவினர்களும், ஊர் மக்களும் பயமுறுத்துகிறார்கள்.
அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் நண்பர் காளி வெங்கட்டுடன் ஆரி, தியேட்டருக்குள் போகிறார். இரவு முழுவதும் அங்கே தங்கினால்தான் பேய் இல்லை என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்...தியேட்டரை வாங்குவதற்கு முன்வருவார்கள் என்று அவர் கருதுகிறார். அதற்காக, ஆரி நண்பர் காளி வெங்கட்டுடன் இரவு முழுவதும் தியேட்டரிலேயே தங்குகிறார்.
நள்ளிரவில் பேய் வருகிறது. மிரட்டுகிறது. பின், தனது சோக கதையை சொல்லி, ஆரியை பயன்படுத்தி, வில்லனை தீர்த்துக் கட்டுகிறது.
ஆரி, மாயா படத்துக்குப்பின், மீண்டும் ஒரு பேய் பட நாயகனாகி இருக்கிறார். அவருடைய பெரிய கண்களும், முன் அனுபவமும் பயந்த முகத்தை திரையில் காட்ட உதவியுள்ளன. அவர் ஆஷ்னா சவேரியை பெண் பார்க்க போவது, வீட்டு தரகர் என்பதால் அவரை, வேண்டாம் என்று ஆஷ்னா சவேரி நிராகரிப்பது...என்று தமாசாக ஆரம்பிக்கிறது, படம்.
ஆரி, நண்பர் காளி வெங்கட்டுடன் சேர்ந்து அந்த ஆரம்ப காட்சிகளில், கலகலப்பூட்டுகிறார். அப்புறம், பேயை பார்த்து மிரளுகிறார். கிளைமாக்ஸ்சில் நிறைய சண்டை போட்டு ஒரு கதாநாயகனுக்குரிய வேலைகளை செவ்வனே செய்து முடிக்கிறார்.
சாப்ட்வேர் என்ஜினீயரை மணக்க ஆசைப்படுவது, அது நிறைவேறாததால் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு ஆரியை காதலிப்பது, ஆரியையும், காளி வெங்கட்டையும் இணைத்து சந்தேகப்படுவது என ஆஷ்னா சவேரிக்கு அதிக பளு இல்லாத வேலைகள். சுலபமாக செய்து முடிக்கிறார். ஆரியின் தங்கையாக வரும் அதுல்யாவை அதிக சிரமப்படுத்தாதது, டைரக்டரின் புத்திசாலித்தனம்.
கதாநாயகியாக இருந்து அக்காள், அண்ணி வேடங்களுக்கு மாறிய சித்தாரா, அம்மா வேடத்துக்கு இறங்கியிருக்கிறார். தலையில் ஒரு நரை கூட இல்லாத இளமையான அம்மா! காளி வெங்கட் வழக்கம் போல் வசன உச்சரிப்பில், காமெடி செய்கிறார். மனோபாலா, வசன சிரிப்பு காட்சியில் வந்து போகிறார். சாமியாராக கயல் தேவராஜ், கலக்கியிருக்கிறார்.
நவுஷத்தின் ஒளிப்பதிவும், ஸ்ரீயின் பின்னணி இசையும் சேர்ந்து மிரட்டியுள்ளன. படம் ஓடாத தியேட்டர், அதற்குள் நுழையும் கதாநாயகன், நிழல் உருவத்தின் நடமாட்டம் என எல்லா பேய் படங்களிலும் வருகிற காட்சிகள், நாகேஷ் திரையரங்கிலும் தவறாமல் இடம் பெற்றுள்ளன. இந்த குறைகளை, படத்தின் உச்சக்கட்ட காட்சி நிறைவு செய்கிறது. ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகளின் ரத்தத்தை உறிஞ்சி, அதில் உள்ள பிளாஸ்மாவை எடுப்பது, இதுவரை எந்த படத்திலும் பார்த்திராதது. அந்த வகையில் கவனம் ஈர்க்கிறார், டைரக்டர் இசாக்.