“நான் பயப்பட மாட்டேன். என்னை பயமுறுத்த முயற்சிப்பவன் முகத்தில்தான் பயம் தெரியும்” - நேர்கொண்ட பார்வை விமர்சனம்

அஜித்குமார்-வித்யாபாலன் நடித்து, வினோத் டைரக்‌ஷனில், ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்த படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். ‘பிங்க்’ என்ற இந்தி படத்தை தழுவிய கதை.
“நான் பயப்பட மாட்டேன். என்னை பயமுறுத்த முயற்சிப்பவன் முகத்தில்தான் பயம் தெரியும்” - நேர்கொண்ட பார்வை விமர்சனம்
Published on

ஷ்ரத்தா ஸ்ரீநாத் குரூப் நடனத்துடன் படம் ஆரம்பிக்கிறது. ஆட்டம்பாட்டம் முடிந்ததும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும், 2 பெண்களும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். ஒரு இளைஞன் ரத்த காயத்துடன் வர, அவனை நண்பர்கள் தாங்கிப்பிடித்தபடி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறார்கள். ரத்த காயம் அடைந்தவன், ஜெயப்பிரகாஷ் எம்.எல்.ஏ.வின் மருமகன். மூன்று பெண்களையும் பலவந்தம் செய்ய முயற்சிக்கிறான். அவனை தாக்கிவிட்டு மூன்று பெண்களும் தப்பி ஓடுகிறார்கள்.

இந்த நிலையில், தாடி-மீசையுடன் அஜித்குமார் ஒரு பூங்காவில் அமர்ந்திருக்கிறார். அவர் ஒரு மர்ம நபர் போல் காணப்படுகிறார். அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட அவசரம் அவசரமாக மாத்திரைகளை விழுங்குகிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும், அவருடைய 2 தோழிகளும் தங்கியிருக்கும் வீட்டுக்கு பக்கத்தில், அஜித் குடிவருகிறார். பரபரப்பாகவும், பதற்றத்துடனும் காணப்படும் மூன்று பெண்களையும் அவர் கண்காணிப்பது போல் நடந்து கொள்கிறார்.

பிளாஷ்பேக்கில் அஜித், துணிச்சலான வழக்கறிஞர். அவருடைய மனைவி வித்யாபாலன். ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருக்கிறார்கள். இந்த நிலையில், வித்யாபாலன் கர்ப்பம் ஆகிறார். அவர் வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பதாகவும், மிகுந்த கவனத்துடன் இருக்கும்படியும் டாக்டர் கூறுகிறார். கவனக்குறைவு காரணமாக வித்யாபாலனும், இரட்டை குழந்தைகளும் மரணம் அடைய அஜித் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார். விரக்தியும், வேதனையும் சேர்ந்து சில சமயங்களில் அவரை வெறிபிடித்த மனிதர் போல் மாற்றுகிறது.

எம்.எல்.ஏ.வின் மருமகனால் மிரட்டப்படும் மூன்று பெண்களுக்கும் அஜித் உதவ முன்வருகிறார். அவர்களுக்காக கோர்ட்டில் வாதாடுகிறார். பாதிக்கப்பட்ட மூன்று பெண்களுக்கும் விலைமாதுகள் பட்டம் சுமத்த முயற்சிக்கிறான், எம்.எல்.ஏ.வின் மருமகன். எந்தவித பின்புலமும் இல்லாத அந்த பெண்களை வழக்கறிஞர் அஜித் தன் வாத திறமையால் எப்படி காப்பாற்றுகிறார்? என்பது மீதி கதை.

தமிழ் பட உலகின் அழகான கதாநாயகர்களில் ஒருவரான அஜித், இந்த படத்தில் நரைத்த தலைமுடி, வெள்ளை தாடி-மீசையுடன் வயதான தோற்றத்தில், இன்னும் அழகாக தெரிகிறார். வழக்கறிஞர் வேடம் அவருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. கோர்ட்டில் அவர் வாதாடும் காட்சிகளில், இதுவரை பார்த்திராத அஜித்! நான் பயப்பட மாட்டேன். என்னை பயமுறுத்த முயற்சிப்பவன் முகத்தில்தான் பயம் தெரியும் என்று வில்லனிடம் அஜித் பஞ்ச் வசனம் பேசும்போது, தியேட்டர் அதிர்கிறது. சண்டை காட்சிகளில், எதிரிகளின் எலும்புகள் முறியும் சத்தம், ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் இருக்கையின் நுனியில் அமர வைக்கின்றன.

வித்யாபாலன், தமிழ் பட உலகுக்கு நல்வரவு. அஜித் ஜோடியாக நூறு சதவீதம் பொருந்துகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் வித்யாபாலன் நடிப்பில் முத்திரை பதிக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும், அவருடைய 2 தோழிகளும் கதாபாத்திரங்களாகவே மாறியிருக்கிறார்கள். அந்த கோர்ட்டு காட்சிகளே சாட்சி. எம்.எல்.ஏ. வேடத்தில் ஜெயப்பிரகாஷ், வில்லனாக வருகிறார். அவருடைய மருமகனாக வரும் புதுமுக வில்லன் கவனம் ஈர்க்கிறார்.

ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்கள். இரவு நேரத்தையும், அதிகாலை பொழுதையும் படம் பிடித்து இருக்கும் விதம், காட்சிகளுக்கு அழகு சேர்க்கிறது. பின்னணி இசை, ஒரு சஸ்பென்ஸ்-க்ரைம் த்ரில்லர் படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. வட மாநிலங்களில் வெற்றி பெற்ற பிங்க் (இந்தி) படத்தை அப்படியே காப்பி அடிக்காமல், அஜித் ரசிகர்களின் ரசனை அறிந்து காட்சிப்படுத்தி இருக்கிறார், டைரக்டர் எச்.வினோத். இடைவேளை வரை படம் புல்லட் ரெயில் போல் சீறிப்பாய்கிறது. இடைவேளைக்குப்பின் படம், சென்டிமென்ட் ரூட்டுக்கு மாறுகிறது. கோர்ட்டு சீன்களின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com