“நூறு கோடி வானவில்” : சினிமா விமர்சனம்

சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி நடித்த ‘நூறு கோடி வானவில்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
“நூறு கோடி வானவில்” : சினிமா விமர்சனம்
Published on: 

'சொல்லாமலே', 'பூ', 'பிச்சைக்காரன்', 'நூறு சாமி' போன்ற எதார்த்தமான வாழ்வியல் படங்களை இயக்கிய சசியின் புதிய படைப்பு.

மும்பையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் ஹரிஷ் கல்யாண் பணி நிமித்தம் காரணமாக கோவாவில் உள்ள கிளைக்கு செல்கிறார். அதேவேளை கோவாவில் எதிர்பாராத ஒரு விபத்தில் சிக்கி கோமாவுக்கு சென்ற தனது காதலர் ரிச்சியை மீட்க போராடி வருகிறார் சித்தி இத்னானி. தனது காதலருக்கு சுயநினைவை மீட்டு தரும் வகையில் தனது அன்றாட நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து அவரை பார்க்கச் செய்தும் வருகிறார்.

ஒரு கட்டத்தில் ஹரிஷ் கல்யாணும், சித்தி இத்னானியும் சந்திக்கிறார்கள் ஆரம்பத்தில் முட்டல் மோதலுமாக சென்றாலும், பின்னர் இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்படுகிறது. இதற்கிடையில் சித்தி இத்னியின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்குகிறார் ஹரிஷ் கல்யாண்.

இதற்கிடையில் ஹரிஷ் கல்யாண் சித்தி இத்னானியை காதலிக்க தொடங்குகிறார். ஏற்கனவே தனது காதலர் இருக்கும் சூழ்நிலையில் புதிய காதலை ஏற்க சித்தி இத்னானி தயங்குகிறார். இந்த சூழலில் கோமாவில் இருந்த ரிச்சிக்கு சுயநினைவு திரும்புகிறது. அதனைத் தொடர்ந்து மூன்று பேரின் வாழ்க்கையிலும் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகின்றன.ஹரிஷ் கல்யாணி காதல் என்ன ஆனது? சித்தி இத்னானியின் மனநிலை என்ன? ரிச்சியின் எதிர்காலம் என்ன ஆனது? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.

இதுவரை ஜாலியாக நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் இந்த படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். அவரது முகபாவனைகள் பெரிய அளவில் கை கொடுத்து இருக்கிறது.

பொறுப்பான நடிப்பால் சித்தி இத்னானி கவர்கிறார். இருதலைக்கொல்லி எறும்பாக தவிக்கும் இடங்களில் நேர்த்தியான நடிப்பை கொடுத்து பாராட்டை அள்ளுகிறார்.

ரிச்சியின் எதார்த்தமான நடிப்பும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் ராம் உள்ளிட்டோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவும், சித்து குமாரின் இசையும் படத்துடன் நம்மை நகர்த்துகிறது.

வித்தியாசமான கதைக்களம் படத்துக்கு பலம். திரைக்கதையில் இன்னும் சுவாரசியம் இருந்திருக்கலாம்.

சாதாரண முக்கோண காதல் கதை என்றாலும், புதுமையான எதார்த்தமான காட்சிகள் மூலம் அதை ரசிக்க செய்து, மீண்டும் ஒரு கவனிக்கத்தக்க படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் சசி. கிளைமாக்ஸ் காட்சி யூகிக்க முடியாதது.

X