சினிமா விமர்சனம்: நாட் ரீச்சபிள்

3 பெண்கள் காணாமல் போகிறார்கள், அதில் இரண்டு பேர் இறந்துவிடுகிறார்கள். அவர்கள் எப்படி இறந்தார்கள், இன்னொரு பெண்ணை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதை.
சினிமா விமர்சனம்: நாட் ரீச்சபிள்
Published on

போலீஸ் கண்ட்ரோல் ரூமுக்கு ஒரு அவசர அழைப்பு வருகிறது. ஆனால், எதிர் முனையில் இருந்து எந்த குரலும் கேட்கவில்லை. உடனே அழைப்பு வந்த இடத்துக்கு போலீஸ் டீம் விரைகிறது.

அந்த வீட்டில் ஒரு இளம் பெண் தூக்கில் தொங்குகிறாள். விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் லாவண்யா என தெரிகிறது. ஆனால் கண்ட்ரோல் ரூமுக்கு வந்த போன் எண் வர்ஷா என்ற பெண் பெயரில் உள்ளது. வர்ஷாவும் ஆபத்தில் இருப்பதை உணரும் போலீஸ் அவளை தேடுகிறது.

இந்த நிலையில், ஹேமா என்ற இளம் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்படுகிறாள். மன நலம் பாதித்த அவளை சிகிச்சைக்காக காப்பகத்தில் அவளது அம்மா சேர்க்கிறார். ஹேமா மீண்டும் மீண்டும் தற்கொலைக்கு முயற்சித்து காப்பாற்றப்படுவது தொடர்கிறது!

இதற்கிடையில், 40 வயது மதிக்கத்தக்க ஒரு கல்லூரி பேராசிரியை கொன்று புதைக்கப்பட்டதை போலீஸ் கண்டறிகிறது. லாவண்யா கொலைக்கும், பேராசிரியை கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா?

இந்த கொலைகளுக்கும் (போலீஸ் உதவியை நாடிய) வர்ஷா காணாமல் போனதற்கும் தொடர்பு இருக்கிறதா? ஹேமாவுக்கு எதனால் மனநலம் பாதித்தது? அதிலிருந்து அவள் மீண்டாளா? என்கிற மர்ம முடிச்சுகளை இடைவேளைக்குப்பின், ஒவ்வொன்றாக அவிழ்க்கிறது படம்.

கதாநாயகன் விஷ்வா, போலீஸ் வேடத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். அவர் விசாரணை நடத்தும் விதம், அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சாய் தன்யா, சுபா, காதல் சரவணன், பிர்லா போஸ் ஆகியோரும் இருக்கிறார்கள்.

சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவிலும், சரண் குமார் இசையிலும் ஆர்வக்கோளாறு தெரிகிறது. பின்னணி இசையில் வாத்தியங்கள் அலறுகின்றன. சந்துரு முருகானந்தம் இயக்கியிருக்கிறார். விறுவிறுப்பாக கதை சொல்ல டைரக்டர் முயற்சித்து இருக்கிறார். திரைக்கதையில் வேகம் போதாது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com