

கதையின் கரு: அசோக் செல்வனே கணவரானால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று ரித்திகா சிங் கருதுகிறார். நண்பர் அசோக் செல்வனிடம், என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்கிறார். கொஞ்சம் தயக்கத்துடன் அசோக் செல்வன் திருமணத்துக்கு சம்மதிக்கிறார்.
இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவி ஆகிறார்கள். இந்த நிலையில், அசோக் செல்வனை விட இரண்டு வயது மூத்த பெண்ணான வாணி போஜன், இவர்களின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். இவரும் அசோக் செல்வனின் சின்ன வயது சினேகிதிதான். இருவருக்கும் இருக்கும் நெருக்கத்தை பார்த்து ரித்திகா சிங் சந்தேகப்படுகிறார்.
அதுவே இரண்டு பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட காரணமாகிறது. இதுதொடர்பாக இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். விவாகரத்து செய்து கொள்வது என்ற முடிவுக்கு வருகிறார்கள். நிம்மதியில்லாமல் தவிக்கும் அசோக் செல்வன் முன்பு கடவுள்கள் விஜய் சேதுபதியும், ரமேஷ் திலக்கும் ஆஜராகிறார்கள். அவருக்கு இன்னொரு வாழ்க்கையை தருவதாகவும், இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் கூறுகிறார்கள்.
அந்த வாழ்க்கையில் ரித்திகா சிங், வாணி போஜன் ஆகிய இருவருடனும் அசோக் செல்வன் பழகுகிறார். இரண்டு பேரில் அவர் யாரை திருமணம் செய்து கொள்கிறார்? என்பது, கிளைமாக்ஸ்.
அசோக் செல்வனுக்கு பெருமைப்பட்டுக் கொள்கிற மாதிரி ஒரு கதாபாத்திரம். படம் முழுக்க வருகிறார். ரித்திகா சிங், வாணி போஜன் ஆகிய இருவருடனும் ஜோடி போடுகிறார். ரித்திகா சிங்குடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை போடும்போதும், இரண்டாவது வாழ்க்கையில், அதே ரித்திகா சிங் பேரழகியாக அவர் கண்களுக்கு தெரிகிற போதும், உணர்ச்சி பொங்க நடித்து இருக்கிறார்.
ரித்திகா சிங் சராசரி மனைவியாக கணவரை சந்தேகப்படும் காட்சிகளில், கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். வாணி போஜன், நயன்தாரா சாயலில் காதல் தேவதையாக வருகிறார். அவர் வருகிற காட்சிகள் எல்லாமே வசீகரிக்கின்றன.
விஜய் சேதுபதியின் வருகை, ஒரு இன்ப அதிர்ச்சி. இவரும், ரமேஷ் திலக்கும் மனித உருவத்தில் வரும் கடவுள்களாக கதையுடன் ஒன்ற வைக்கிறார்கள். ஷாராவுக்கு நண்பர் வேடம். ஒரு நண்பனுக்கே உரிய கடமைகளை தவறாமல் செய்து, நல்ல பெயர் சம்பாதிக்கிறார். சொன்னால் உனக்கு புரியாது என்று அசோக் செல்வன் சொல்லும்போது, ஷாராவின் முகமெல்லாம் காமெடி.
விது அய்யண்ணா ஒளிப்பதிவும், லியோன் ஜேம்சின் பின்னணி இசையும் திரைக்கதைக்கு கூடுதல் அழகும், விறுவிறுப்பும் சேர்க்கின்றன. படத்தின் முதல் பாதி காதலும், மோதலுமாக கடந்து போகிறது. இரண்டாவது பாதியில், ஆரம்பம் முதல் இறுதிவரை கவித்துவமான காட்சிகள். ஒரு காதல் கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்லி கைதட்ட வைக்கிறார், டைரக்டர் அஸ்வத் மாரிமுத்து.