

சென்னை,
டி.ராஜேந்தர் படங்களில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு என்று அனைத்து பணிகளையுமே டி.ராஜேந்தரே செய்திருப்பார்.
ஆனால் அதையும் தாண்டி தொழில்நுட்ப பணிகள் மட்டுமன்றி, படத்தில் இடம்பெறும் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தானே நடித்து, படத்தின் பின்னணி வேலைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தானே செய்து, தனி மனிதராக ஒரு முழுப்படத்தையும் உருவாக்கியிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.
நான்கு நண்பர்கள் மற்றும் ஒரு கார் டிரைவர் என ஐந்து குழுவின் பயணத்தில் தொடங்கும் கதை இது. மனிதனின் பேராசையால் ஒரு உயிரினம் கூட இல்லாமல் உலகம் அழிந்துவிடும் அபாயகரமான கண்டுபிடிப்பு கண்டுபிடிக்கப்படுகிறது.
அந்த கண்டுபிடிப்பை பயன்படுத்தி 10 நாட்கள் உலகையே ஆள வேண்டும் என்று அந்த நான்கு நண்பர்கள் ஆசைப்படுகிறார்கள். அதில் ஒருவர் யாருமில்லாத உலகில் தனி ஆளாக வாழ துடிக்கிறார். அது நடந்ததா, எத்தகைய ஆபத்தை அவர்கள் எதிர்கொண்டார்கள்? இறுதியில் என்ன ஆனது? என்பதே மீதி கதை.
படத்தின் அத்தனை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சங்ககிரி ராஜ்குமார், முடிந்தவரை ரசிக்க வைத்திருக்கிறார். சில காட்சிகள் எப்படி எடுத்தார்கள்? என்ற வியப்பையும் ஏற்படுத்தியுள்ளார். கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். வனப்பகுதியில் படமாக்கப்பட்ட கூட்டம் நிறைந்த காட்சி வியப்பளிக்கிறது.
சில சில குறைகள் இருந்தாலும், இப்படி ஒரு முயற்சியில் அந்த குறை கண்ணுக்கு தெரியாமல், தனி ஒருவரால் இப்படி ஒரு படத்தை எப்படி எடுக்க முடியும் ? என்ற கேள்வி எழுகிறது.
ஒளிப்பதிவும், இசையும் ஓகே. ரகம். வியப்புக்குரிய காட்சிகள் படத்துக்கு பலம். கிராபிக்ஸ் காட்சிகள் பலவீனம். சினிமா விரும்பிகளை மட்டும் இன்றி, சினிமா மீது ஆர்வம் இல்லாதவர்களை கூட வியப்பில் ஆழ்த்தும் படைப்பை கொடுத்து கவனம் ஈர்த்துள்ளார், சங்ககிரி ராஜ்குமார். விமர்சனம், வசூல் தாண்டி இது ஒரு சாதனை படைப்பு.