பாயும் ஒளி நீ எனக்கு : சினிமா விமர்சனம்

பாயும் ஒளி நீ எனக்கு : சினிமா விமர்சனம்
Published on

விக்ரம் பிரபு சிறுவயதிலேயே விபத்தில் பெற்றோரை இழக்கிறார். அந்த விபத்தில் விக்ரம் பிரபுவின் பார்வையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. வெளிச்சத்தில் மட்டுமே பார்க்க முடியும். இரவில் பார்வை குறைபாடு ஏற்பட்டுவிடும். அந்த குறை தெரியாமல் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நகர்த்துகிறார். நண்பர்களுடன் இணைந்து சாப்ட்வேர் தொழில் செய்கிறார். வாணிபோஜனுடன் காதலும் வருகிறது.

ஒரு இரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் இருவரை அடித்து நொறுக்கிறார். அதன்பிறகு விக்ரம் பிரபுவுக்கு பிரச்சினைகள் தொடர்கின்றன. ஆட்டோவில் பயணிக்கும்போது அவரை கும்பல் தாக்கி கொலை செய்ய முயற்சிக்கிறது. அதில் இருந்து தப்புகிறார். தனது சித்தப்பாவை கொலை செய்கின்றனர்.

இன்னொரு புறம் அரசியலில் பிரபலமாக இருக்கும் வேல ராமமூர்த்தியை வீழ்த்தி அவரது இடத்தை பிடிக்க வேண்டும் என்று வில்லன் தனஞ்செயா துடிக்கிறார். தனது சித்தப்பாவை கொன்றவர்களை பழிவாங்க துடிக்கும் விக்ரம்பிரபுவுக்கு சில மர்மங்கள் தெரிய வருகிறது.

கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் தண்டிக்கப்பட்டார்களா? என்பது மீதி கதை..

கண்பார்வை குறைபாடு உடையவராக வரும் விக்ரம் பிரபுவுக்கு வித்தியாசமான கதைக்களம், கதாபத்திரம் அதை நன்றாக பயன்படுத்தி நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பார்வை குறைபாடுக்கு மத்தியில் லேசான வெளிச்சம், சத்தம் ஆகியவற்றை வைத்து வில்லன்களுடன் மோதும் சண்டையில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி வேகம் காட்டி உள்ளார்.

வாணிபோஜன் கொஞ்ச நேரம் வந்தாலும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி உள்ளார்.

வேல ராமமூர்த்தி இளமை தோற்றத்தில் கத்தியுடன் வில்லன்களுடன் மோதும்போது கவனம் பெறுகிறார்.

தனஞ்செயா வில்லத்தனத்தில் மிரட்டி உள்ளார். இன்னொரு வில்லனாக வரும் பைசல் குரூரம் காட்டி உள்ளார். விவேக் பிரசன்னா கதாபாத்திரத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்.

திரைக்கதையை இன்னும் வலுவாக்கி இருக்கலாம்.

அதிரடி திரில்லர் கதையை அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்போடு விறுவிறுப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் கார்த்திக் அத்வைத்., பார்வை குறைபாடு உள்ளவர்கள் பார்வையில் வாழ்க்கை நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை ரசிக்கும் வகையிலும் கொடுத்துள்ளார்.

சாகர் பின்னணி இசை ஒன்றவைக்கிறது. ஶ்ரீதர் ஒளிப்பதிவு பலம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com