'பரிமளா அண்ட் கோ' திரைப்பட விமர்சனம்

இயக்குனார் பாண்டிராஜ் இயக்கிய 'பரிமளா அண்ட் கோ' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
'பரிமளா அண்ட் கோ' திரைப்பட விமர்சனம்
Published on

சென்னை,

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜெயராம் - ஊர்வசி தம்பதியின் மகளான அனந்திகாவுக்கு, அந்த பகுதியை சேர்ந்த ரவுடியான சாண்டி தொல்லை தருகிறார். சாண்டியின் பெற்றோரும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். ஜெயராம் குடும்பத்தையும் அவ்வப்போது மிரட்டி வருகிறார்கள். நாளுக்கு நாள் சாண்டியின் தொல்லை அதிகரிக்க, ஒருகட்டத்தில் சாண்டியை கொன்றுவிடலாமா? என்று ஜெயராம் குடும்பத்தினர் யோசிக்கிறார்கள்.

இந்த சூழலில் சாண்டி கொலை செய்யப்படுகிறார். அவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி மிஷ்கினுக்கு, ஜெயராம் குடும்பத்தினர் மீது சந்தேகம் எழுகிறது. இதனால் ஜெயராம் குடும்பத்தினரை கண்காணிக்க தொடங்குகிறார்.

இதற்கிடையில் சாண்டியின் நண்பரும், அம்மாவும் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். அதேவேளை ஜெயராம் குடும்பத்தினரையும் ஒரு சிக்கல் சூழ்கிறது.

சாண்டியை கொலை செய்தது யார்? ஜெயராம் குடும்பத்தை சூழ்ந்த சிக்கல் என்ன ஆனது? ஜெயராம் தனது குடும்பத்தினரை காப்பாற்றினாரா, இல்லையா? என்ற பல கேள்விகளுக்கு விடையாக நகர்கிறது மீதி கதை.

பரிமளா கதாபாத்திரத்தில் ஜெயராமின் நடிப்பு அடாவடி. சாண்டி கொலையை தொடர்ந்து யார் கொலை செய்தது? என்று குடும்பத்தினரிடம் அவர் விசாரிக்கும் இடங்கள் கலகலப்பு. அனுபவ நடிப்பால் அசத்தும் ஊர்வசி, அவ்வப்போது 'டைமிங் காமெடி' மூலமும் ரசிக்க வைக்கிறார்.

ஜெயராமின் மகள்களாக வரும் சஞ்சனா, அனந்திகா பொருத்தமான தேர்வு. வீட்டு உரிமையாளராக யோகிபாபு, போலீஸ் அதிகாரியாக வரும் மிஷ்கின் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள். தமிழ்குமரன், சாண்டி, காயத்ரி, சென்டிராயன் என அனைவருமே குறைவில்லாத நடிப்பால் கவர்கிறார்கள். ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவும், பாக்ஸன் இசையும் படத்துடன் ஒன்ற செய்கிறது.

பல இடங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பொறுமையை சோதிக்கிறார்கள். திரைக்கதையும் ஒருகட்டத்தில் திசை மாறியுள்ளது. தேவையில்லாத கதாபாத்திரங்களை கொட்டி வைத்திருப்பது நியாயமா? சில இடங்களில் நீளமான வசனங்களும் 'உச்' கொட்ட வைக்கின்றன.

கரடு முரடான பாதையில் வண்டி ஓட்டினாலும், இறுதியில் சமூக கருத்து ஒன்றை சொல்லி இளைய சமுதாயத்தினருக்கு முக்கிய தகவலை சொல்லி, 'எஸ்கேப்' ஆகிவிட்டார் இயக்குனார் பாண்டிராஜ். பலே ஆளய்யா...

பரிமளா அண்ட் கோ சூப்பர் காபி... ஆனால் சூடு கம்மி...

X

Daily Thanthi
www.dailythanthi.com