பவுடர்: சினிமா விமர்சனம்

ஒரு இரவில் நிகழும் கொலைகளை சுற்றி நடக்கும் திகில் கதை.
பவுடர்: சினிமா விமர்சனம்
Published on

வாழ்க்கையை தொலைத்த மகளுக்காக நியாயம் தேடும் அப்பா, வயிற்று பிழைப்புக்காக கொள்ளையடிக்கும் திருடர்கள், தொகுதி மக்களுக்கு அநீதி செய்த எம்.எல்.ஏ.வை தீர்த்துக்கட்டும் இளைஞர்கள், மகனுக்கு கல்வி கட்டணம் செலுத்த வழியின்றி தவிக்கும் ஏழை தந்தை, குடும்ப சுயநலத்துக்காக போலீசை பயன்படுத்தும் கமிஷனர், பாலியல் மிரட்டலால் நிம்மதியை இழந்த பெண் டாக்டர் என கதையின் மாந்தர்கள் சில பிரச்சினைகளோடு வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக இரவில் சில கொலைகள் நடக்கிறது. குற்றவாளிகளை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு கதையின் நாயகனும், போலீஸ் இன்ஸ்பெக்டருமான நிகில் முருகனிடம் வந்தடைகிறது. குற்றவாளிகள் சிக்கினார்களா? என்பதை பரபரப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டருக்கான கம்பீரமான குரல், உடல்மொழி என அனைத்தையும் அளவாக வெளிப்படுத்தி நேர்மையான போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார் கதாநாயகன் நிகில் முருகன்.

டாக்டராக வரும் கதாநாயகி வித்யா பிரதீப் அழகாக இருக்கிறார். அச்சப்பட வேண்டிய சில இடங்களில் பயம் இல்லாமல் தெரிகிறார்.

மேக்கப்மேனாக குடும்பம் நடத்த கஷ்டப்படும் விஜய் ஸ்ரீஜி, கதாபாத்திரம் மனதை தொடும் ரகம். மனைவி திட்டும்போது மவுனமாக இருந்து பரிதாபத்தை அள்ளுகிறார்.

அப்பாவாக வரும் வையாபுரி, மகளாக வரும் அனித்ரா நாயர், போலீஸ் கமிஷனராக வரும் ரயில் ரவி என அனைவரும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்க்கிறார்கள்.

இறுக்கமாக நகரும் திரைக்கதையில் சிங்கம்புலி, ஆதவன் சிரிக்க வைக்கிறார்கள்.

திகில் கதைக்கு தேவையான இசையை நிறைவாக கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி. கடைசியில் வரும் 'நோ சூடு, நோ சொரணை' பாடல் துள்ளல் ரகம்.

ராஜா பாண்டி கேமரா இரவு பயங்கரத்தை சிறப்பாக படம் பிடித்து உள்ளது. திகில் கதைக்கு தேவையான விறுவிறுப்பு சில இடங்களில் குறைந்து காணப்படுவதை தவிர்த்திருந்தால் இன்னும் கவனம் பெற்று இருக்கும்.

சமூகத்தில் நடக்கும் வெவ்வேறு அவலங்களை ஒரே திரைக்கதைக்குள் கோர்த்து சமூக அக்கறையுடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com