இராவண கோட்டம் : சினிமா விமர்சனம்

சாதி கலவரங்களின் பின்னணியில் இருக்கும் ஆதாய அரசியலையும் அதன் சூட்சுமம் அறியாமல், ஈசலாக அதில் விழும் அப்பாவி மனிதர்களின் அறியா இயல்பையும் சொல்ல முயன்றிருக்கிறார், இயக்குநர் விக்ரம் சுகுமாரன்.
இராவண கோட்டம் : சினிமா விமர்சனம்
Published on

 ராமநாதபுரம் ஏனாதி கிராமத்தில் மேலத்தெரு, கீழத்தெருவில் இரண்டு சமுதாய மக்கள் வசிக்கின்றனர். மேலத்தெருவுக்கு தலைவர் பிரபு. கிழத்தெரு தலைவராக இளவரசு.இருவரும் மக்களை ஒற்றுமையாக வழி நடத்துகிறார்கள். இவர்களுக்கு மேலத்தெருவை சேர்ந்த சாந்தனு, கீழத்தெருவை சேர்ந்த சஞ்சய் சரவணன் பக்க பலமாக இருக்கின்றனர்

ஊருக்குள் அரசியல் கட்சி கொடிகள் பறக்க அனுமதிப்பது இல்லை. அந்த கிராமத்துக்குள் கனிம வளங்கள் இருப்பதை அறிந்து கார்பரேட் நிறுவனங்கள் கால் பதிக்க வருகின்றன.இதற்காக அவர்களை வெளியேற்ற இரு தெரு மக்களிடமும் பிரிவை உண்டு பண்ணி கலவரத்தை ஏற்படுத்த மந்திரியும், எம்.எல்.ஏ.வும் சதி செய்கின்றனர். அது நடந்ததா? என்பது மீதி கதை..

சாந்தனுவுக்கு முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள களம். அதில் புகுந்து விளையாடி இருக்கிறார். ஊர் தலைவரிடம் பணிவு, காதலியிடம் கொஞ்சல், கபடியில் ஆக்ரோஷம், நண்பனை காப்பாற்ற துடிக்கும் தவிப்பு, அரசியல் ரவுடிகளை ஆவேசமாக தாக்கும் சண்டை என்று சகல ஏரியாவிலும் செஞ்சுரி அடிக்கிறார்.

கிளைமாக்சில் போலீசாரால் மண் தரையில் இழுத்து செல்லப்படும் காட்சியில் அனுதாபம் அள்ளுகிறார். கயல் ஆனந்தி கிராமத்து தேவதையாய் பளிச்சிடுகிறார். சாந்தனு மீதான அவரது மோதலும், காதலும் ரசனை.

ஊர் தலைவராக மிடுக்காக வருகிறார் பிரபு. இரு தெரு மக்கள் ஒற்றுமையாக வாழ எடுக்கும் முயற்சிகள் மூலம் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார். இளவரசு வழக்கம் போல் தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார். சஞ்சய் சரவணன் நல்ல நண்பனாக வருகிறார். ஒரு கட்டத்தில் வில்லத்தனத்துக்கு மாறி இன்னொரு முகம் காட்டுகிறார். தீபா சங்கர், அருள்தாஸ், தேனப்பன், ராசாகண்ணு, சுஜாதா சிவகுமார், முருகன், சத்யா ஆகியோரும் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளனர்.

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் போகப்போக அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்போடு விறுவிறுப்புக்கு மாறுகிறது. ஜஸ்டின் பிரபாகர் இசை திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளது.

வெற்றிவேல் மகேந்திரன் கேமரா வறண்ட நிலத்து மக்களின் வாழ்வியலை கண்முன் நிறுத்துகிறது.

அரசியல் சதியையும், அதனால் இரண்டு சமூக மக்கள் வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளையும் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் விக்ரம் சுகுமாரன்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com