“ராமாயணா” : சினிமா விமர்சனம்

“ராமாயணா” : சினிமா விமர்சனம்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியான ‘ராமாயணா’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
Published on: 
இதிகாசம் திரை வடிவில்(4.5 / 5)

மாபெரும் இதிகாசமான ராமாயணத்தை திரை வடிவில் நிதேஷ் திவாரி இயக்கியுள்ள படம் ‘ராமாயணா’. ரூ.2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம். ஏ.ஆர். ரகுமானின் இசை ஒவ்வொரு காட்சிக்கும் உயிரை தருகிறது.

ராமர் முடிசூடும் நேரத்தில் கைகேயி தன் மகன் பரதனுக்குக்கு தான் நாடு வேண்டும், ராமர் வனவாசம் செல்ல வேண்டும் என்று கோரிக்கையை வைக்க, அப்பாவின் கோரிக்கையை தட்ட முடியாமல் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் வனவாசம் செல்கின்றனர்.

வனவாசம் சென்ற இடத்தில் ராமர் மீது ராவணன் தங்கை சூர்பனகை ஆசைக்கொள்ள, ராமரோ கோபத்தில் சூர்பனகை மூக்கை வெட்டுகிறார், இதனால் கோபமான சூர்பனகை தன் அண்ணன் ராவணனிடம் சொல்ல, ராவணன் கோபம் கொண்டு ராமரை வீழ்த்த வந்த இடத்தில் தனியாக இருக்கும் சீதையை பார்த்து அவர் மீது காதல் கொண்டு கடத்தி செல்கிறார். இதன் பின் ராமர், இலங்கைக்குச் சென்று எப்படி சீதையை மீட்கிறார், இந்த பயணத்தில் அவருக்கு என்ன தடைகள் வந்தது? என்பதே படத்தின் கதை.

ராமர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார் ரன்பீர் கபூர். அவரது தேஜஸ் நிறைந்த பொலிவான முகமும் தோற்றமும் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கிறது. எல்லை மீறாத அவரது அளவான நடிப்பு பாராட்டுக்குரியது.

சீதை கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. அமைதியின் உருவமாக படம் முழுக்க அலங்கரிக்கிறார். ராமர் லட்சுமணர்களுடன் சேர்ந்து அவர் சண்டை புரியும் காட்சிகளிலும் வியப்பு.

ஒட்டுமொத்தமாக ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள யாஷ் படத்துக்கு மிகப்பெரிய கம்பீரம் சேர்த்துள்ளார். சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்கியுள்ளார் எல்லாவற்றிலும் மேலாக இக்கட்டான சூழலில் ராமரை எதிர்த்து போர் புரிவது நல்லதா, கெட்டதா? என்று தனது பத்து தலையுடன் அவர் யோசிக்கும் இடம் அடடா...

லட்சுமணனாக வரும் ரவி துபே, ராவணன் மனைவியாக காஜல் அகர்வால், தங்கையாக வரும் ரகுல் ப்ரீத் சிங், கைகேயியாக லாரா தத்தா, கைகாசியாக ஷோபனா ஆகியோர் அனைவருமே பொருத்தமான தேர்வு.

பங்கஜ் குமார், ரமேஷ் லிமயி ஆகியோரின் ஒளிப்பதிவில் கேமரா வித்தை காட்டி இருக்கிறது. கிராபிக்ஸ் பணிகளும் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து ஏ ஆர் ரகுமான் இசையில் மாயாஜாலம் செய்துள்ளார். புதுமையான ஒலிகளும் எந்த இசைக்கருவியிலிருந்து இவை வந்தன? என்று யோசிக்க வைக்கிறது. பட முழுக்க இசை ஆக்கிரமித்து உள்ளது.

எல்லோருக்கும் தெரிந்த புராணக் கதை என்றாலும் மெய்சிலிர்க்க வைக்கும் பிரம்மாண்ட காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கிறது. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

அடுத்து என்ன நடக்கும் என்று அனைவருக்கும் தெரிந்த இந்த கதையில் பிரம்மாண்டத்தையும், சிலிர்க்க வைக்கும் காட்சிகளையும் ஒருங்கிணைத்து அனைவரையும் வியக்க வைத்து பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் நிதேஷ் திவாரி.

சீதையை ராவணன் கடத்திச் செல்ல, என் மனைவியை எப்படியாவது மீட்பேன் என்று ராமர் சபதம் செய்வதுடன் முதல் பாகம் நிறைவடைந்து இருக்கிறது. இதனால் எல்லோரும் எதிர்பார்த்த அனுமன் கதாபாத்திரத்துக்கு முதல் பாகத்தில் வேலை இல்லை.

‘ராமாயணா’ படத்தில் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு (2027) தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.

X