ரெட் சாண்டல் வுட் : சினிமா விமர்சனம்

ரெட் சாண்டல் வுட் : சினிமா விமர்சனம்
Published on

செம்மரக்கடத்தலை மையமாக வைத்து வந்துள்ள படம்.

அதிக பணம் தருவதாக ஏமாற்றி வறுமையில் இருக்கும் தமிழர்கள் சிலரை தரகர் திருப்பதிக்கு அழைத்து சென்று திருட்டுத்தனமாக செம்மரம் வெட்ட வைக்கிறார். அதில் நாயகன் வெற்றியின் நண்பன் விஸ்வந்தும் இருக்கிறார். நண்பனை தேடி வெற்றி ஆந்திரா செல்கிறார்.

அங்கு செம்மரங்களை கடத்தி வந்தவர்களோடு வெற்றியையும் போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. இவர்கள் மூலம் கடத்தலுக்கு மூளையாக செயல்படும் தாதாவின் பெயர் போலீஸ் வசம் கசிகிறது.

இதை அறியும் தாதா பதற்றமாகி தனக்கு வேண்டிய போலீசை வைத்து வெற்றி உள்ளிட்ட எல்லோரையும் என்கவுண்ட்டரில் கொல்ல ஏற்பாடு செய்கிறான்.

அப்பாவி தமிழர்கள் நிலைமை என்ன ஆனது? செம்மர கடத்தல் பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் என்ன? நண்பனை வெற்றியால் கண்டுபிடித்து ஊருக்கு அழைத்து வர முடிந்ததா? என்பது மீதி கதை.

வெற்றி நடிக்கிறார் என்பது தெரியாத அளவுக்கு கதாபாத்திரத்தோடு ஒன்றி இருக்கிறார். காதல், நட்பு, கோபம், வெறி என அத்தனை உணர்வுகளையும் கண்களிலும் உடல்மொழியிலும் அபாரமாக வெளிப்படுத்தி உள்ளார். அதிரடி சண்டையிலும் வேகம்.

எம்.எஸ்.பாஸ்கர் உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கி இருக்கிறார். போலீஸ் அதிகாரியிடம் வாழ்க்கை கதையை கூறி கதறும்போது படம் பார்ப்பவர்களையும் கலங்க வைத்து விடுகிறார்.

நாயகி தியா மயூரி சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்.

நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் கணேஷ் வெங்கட்ராமன், நண்பனாக வரும் விஸ்வந்த் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

கே.ஜி.எப். ராம் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். வினோத் சாகர், மாரிமுத்து, ரவி வெங்கட்ராமன் ஆகியோரும் உள்ளனர்.

சாம் சி.எஸ். பின்னணி இசை திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது. சுரேஷ் பாலாவின் கேமரா வனப்பகுதியை அம்சமாக படம் பிடித்துள்ளது.

விளக்கமாக சொல்ல வேண்டிய காட்சிகளை அவசர கோலத்தில் முடித்து இருப்பது பலகீனம்.

செம்மரக்கடத்தல் பின்னணியில் இருக்கும் அரசியல், அதிகார பலம், பணம், பலிகடாவாக ஆக்கப்படும் அப்பாவித் தமிழர்களின் வலி போன்றவற்றை நேர்த்தியான திரைக்கதையில் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி மனதில் பதிய வைத்துள்ள குரு ராமானுஜம் திறமையான இயக்குனராக கவனம் பெறுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com