சரத்குமாரின் “ஆழி” - சினிமா விமர்சனம்

மாதவ் ராமதாசன் இயக்கத்தில் சரத்குமார் நடித்துள்ள ‘ஆழி’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
சரத்குமாரின் “ஆழி” - சினிமா விமர்சனம்
Published on

மீன்பிடி படகு மெக்கானிக்கான சரத்குமார், போதைப் பொருள் மற்றும் ஆயுதம் கடத்தல் என சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். கல்லூரி படிக்கும் இவரது ஒரே மகளான தேவிகாவும், சக மாணவர் இந்திரஜித் ஜெகஜித்தும் காதலிக்கிறார்கள். இந்த காதல் விவகாரம் சரத்குமாருக்கு தெரியவர ஆத்திரம் கொள்கிறார். இந்திரஜித் ஜெகஜித்தை கடத்தி, மீன்பிடி படகில் ஏற்றி ஆழ்கடலுக்கு கூட்டி செல்கிறார்.

ஆழ்கடலில் வைத்து மாணவரை கொலை செய்ய சரத்குமார் திட்டம் தீட்டுகிறார். சரத்குமாரின் சதி திட்டத்தில் இருந்து அந்த மாணவர் தப்பித்தாரா, இல்லையா? இந்திரஜித் ஜெகஜித் - தேவிகா காதல் கை கூடியதா? என்பதே பரபரப்பான மீதி கதை.

பாசம் ஒருபுறம், கோபம் மறுபுறம் என இரு பரிமாணங்களில் அட்டகாசமான நடிப்பை வழங்கி மிரட்டியுள்ளார், சரத்குமார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் வெளுத்து வாங்கியுள்ளார், 71 வயது இளைஞரான சரத்குமார். வயசே ஆகாதா உங்களுக்கு?

இந்திரஜித் ஜெகஜித் முடிந்தளவு நடித்துள்ளார். அவரது தோற்றம் வித்தியாசமாக இருந்தாலும், நடிப்பில் இன்னும் அனுபவம் தேவை. அழகாலும், நடிப்பாலும் கவரும் தேவிகா சதீஷ், குறைவான நேரமே வந்தாலும் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்.

வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரை செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, பிஜூ மவுங்கல் வர்கீஸ், டீனா பாட்டியா உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறையில்லை.

ஆனந்த் என்.நாயரின் ஒளிப்பதிவும், ஜாசி கிப்ட்டின் இசை மற்றும் வில்லியம் பிரான்சிஸ் பின்னணி இசையும் படத்தை நகர்த்தி செல்ல உதவுகின்றன. சில காட்சிகளை யூகிக்க முடிகிறது. ஒரே இடத்தில் நகரும் காட்சிகளும் சற்று யோசிக்க வைக்கின்றன.

திருப்பங்கள் குறைவு என்றாலும், பரபரப்பான காட்சிகள் மூலம் படத்தை நகர்த்தி கவனம் ஈர்த்துள்ளார் இயக்குனர் மாதவ் ராமதாசன். காதலி பெயரை ரத்தத்தில் எழுதும் காதலனிடம், தனது மகளின் பெயர் நெஞ்சில் பச்சை குத்தப்பட்டிருப்பதை சரத்குமார் காட்டும் இடம் சிலிர்ப்பு.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com