சர்தார்: சினிமா விமர்சனம்

கார்த்தி சர்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று தந்தை-மகனாக இரு வேடங்களில் அசத்தலாக வருகிறார்.
சர்தார்: சினிமா விமர்சனம்
Published on

கார்த்தி சிறு வயதாக இருக்கும்போதே அவரது தந்தை சர்தார் தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்டு மாயமாகிறார். குடும்பத்தினரும் அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் வழக்கை முடிக்கிறது.

வளர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டராகும் கார்த்தியை தேசத்துரோகி மகன் என்று சக அதிகாரிகள் கேலி செய்கின்றனர். இன்னொரு புறம் குடிநீரை வியாபாரமாக்கும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக லைலா வழக்கு போட்டு மூட வைக்கிறார். அவருக்கு வக்கீலாக வரும் ராஷிகன்னா உதவுகிறார். ராஷி கன்னா மீது கார்த்திக்கு காதல்.

ஒரே நாடு ஒரே குழாய் குடிநீர் திட்டத்தை இந்தியா முழுவதும் அமல்படுத்த சர்வதேச நிறுவனம் களம் இறங்குகிறது. அந்த நிறுவனத்தின் பின்னணியில் சீனா இருக்கிறது. இந்த திட்டத்தினால் நாட்டுக்கு பேராபத்து வரும் என்று போராடும் லைலா மீது தேசத் துரோக பழி விழுகிறது. மறுநாள் அவர் கொலையுண்டு கிடக்கிறார்.

கொலைக்கான காரணத்தை கார்த்தி விசாரிக்கும்போது ஒரே குழாய் குடிநீர் திட்டத்தின் பின்னணியில் பயங்கரமான சர்வதேச சதியும், உள்ளூர் அதிகார வர்க்கமும் இருப்பது தெரிந்து அதிர்கிறார். இந்த கும்பல்தான் அவரது தந்தை மீது பழி சுமத்தி காணா மனிதராக ஆக்கியதையும் அறிகிறார். ஒரே குழாய் திட்டம் முறியடிக்கப்பட்டதா? என்பது மீதி கதை.

கார்த்தி சர்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று தந்தை-மகனாக இரு வேடங்களில் அசத்தலாக வருகிறார். போலீஸ் அதிகாரி வேடம் கலகலப்பானது. சுய விளம்பரத்துக்காக அவர் செய்யும் காரியங்கள், ராஷி கன்னாவிடம் காதலில் வழிவது சுவாரஸ்யமானவை. வெறுப்பு காட்டும் ராஷிகன்னாவிடம் பஸ்சுக்குள் காதலை கண்ணீருடன் வெளிப்படுத்தும் காட்சி ஜீவன்.

இதற்கு முற்றிலும் மாறுபட்ட முரட்டுத்தனத்தை சர்தார் தோற்றத்தில் காட்டுகிறார். வெளிநாட்டு சிறையில் கலவரம் செய்யும் ரவுடிகளை அடித்து நொறுக்கி அவர் அறிமுகமாகும் ஆரம்பம் அமர்க்களம். சர்தாரை கொன்று விடும்படி இந்தியாவில் இருந்து உத்தரவு வந்ததும் இவர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிற வைக்கிறது. கடலுக்குள் குதித்து இந்தியாவுக்கு வருவதும், அவரை வேட்டையாட கார்ப்பரேட் குடிநீர் வியாபார கும்பல் துடிப்பதும் விறுவிறுப்பு.

ராஷி கன்னா வக்கீல் கதாபாத்திரத்தில் மிடுக்கு காட்டுகிறார். கார்ப்பரேட் வில்லனாக சங்கி பாண்டே மிரட்டுகிறார். தண்ணீர் போராளியாக லைலா சிறுதுநேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார். முனிஷ்காந்த் சிரிக்க வைக்கிறார். சர்தார் மனைவியாக வரும் ரஷிஜா விஜயன் முடிவு மனதை கனக்க வைக்கிறது. சிறுவன் ரிதிவிக் நடிப்பும் கச்சிதம்.

காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம். உளவாளிகளின் வாழ்க்கையை துல்லியமாக படம் பேசி உள்ளது. சமூக கதையை கையில் எடுத்து அதை நேர்த்தியாக செதுக்கி விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் பி.எஸ்.மித்ரன். ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு ஒவ்வொரு பிரேமையும் பிரமாண்டமாக்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com