"சட்டென்று மாறுது வானிலை"-திரைப்பட விமர்சனம்

இயக்குனர் பாபு விஜய் சொகுசு விடுதியில் தங்கும் ஜோடிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
"சட்டென்று மாறுது வானிலை"-திரைப்பட விமர்சனம்
Published on

சென்னை,

ஐ.டி. ஊழியரான ஜெய், மீனாட்சி கோவிந்தராஜனை பார்த்ததும் காதல் கொள்கிறார். காதலை சொல்லி திருமணமும் செய்து கொள்கிறார். ஆனாலும் ஜெய்யிடம் இருந்து மீனாட்சியை பிரிக்க, அவரது தந்தை துடிக்கிறார். இதற்கிடையில் கொடைக்கானலுக்கு தேனிலவுக்கு செல்லும் ஜெய் - மீனாட்சி தம்பதி, அங்கு கருடா ராமின் சொகுசு விடுதியில் தங்குகிறார்கள்.

அந்த ஓட்டலில் நடந்து வரும் சதிவேலைகளை ஜெய் கண்டறியும் நேரத்தில், மீனாட்சி காணாமல் போகிறார். மீனாட்சி மாயமான வழக்கில் ஜெய் மீது சந்தேகம் கொள்ளும் போலீசார் அவரை கைது செய்கிறார்கள். சொகுசு விடுதியில் நடக்கும் சதி வேலைகள் என்ன? காணாமல் போன மீனாட்சியின் கதி என்ன? அத்தனை சிக்கல்களையும் கடந்து ஜெய் கரையேறினாரா? இல்லையா? என்பதே பரபரப்பான மீதி கதை.

ஜாலியான நடிப்பால் கலக்கியுள்ளார், ஜெய். எமோஷனல் காட்சிகளிலும் முன்னேற்றம் தெரிகிறது. விஜய் ரசிகராக இருக்கலாம். விஜய் மாதிரியே பல இடங்களில் நடிப்பது என்பது சரி தானா? மீனாட்சி கோவிந்தராஜனின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது. படுக்கையறை காட்சிகளில் அவரது தைரியமான நடிப்பு இளசுகளுக்கு கொண்டாட்டம்.

யோகிபாபு - ஆதித்யா கதிரின் கூட்டணியில் இடம்பெறும் காமெடி காட்சிகளுக்கு கஷ்டப்பட்டு சிரிக்கலாம். 'டபுள் மீனிங்' வசனங்கள் எக்கச்சக்கம். கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா ஆகியோரின் நடிப்பிலும் குறைவில்லை. ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் 'கலர்புல்'. கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசை ஓகே ரகம்.

வித்தியாசமான கதைக்களம் பலம். அதை சொன்ன திரைக்கதையில் தடுமாற்றம். திரில்லர் காட்சிகள் இன்னும் திருப்பமாக இருந்திருக்கலாம். தேவையில்லாத பல காட்சிகளுக்கு 'கத்தரி' போட்டிருக்கலாம். சில இடங்களில் கதையின் போக்கு புரியவில்லை.

சொகுசு விடுதியில் தங்கும் ஜோடிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மையப்படுத்தி, அதனை காதல் - ஆக்ஷன் என கமர்ஷியல் படைப்பில் சொல்லியிருக்கும் இயக்குனர் பாபு விஜய்க்கு 'பாஸ் மார்க்' போடலாம். ஏ.ஆர்.முருகதாசிடம் பணியாற்றிய உங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறோம் இயக்குனரே...

சட்டென்று மாறுது வானிலை - மார்கழி மழை.

X

Daily Thanthi
www.dailythanthi.com