ஷூ: சினிமா விமர்சனம்

சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலுக்காக விற்கும் கும்பலை கருவாக கொண்ட படம்.
ஷூ: சினிமா விமர்சனம்
Published on

திலீபன் ஏறக்குறைய ஒரு விஞ்ஞானி. நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லும் அல்லது காட்டும் டைம் மிசினை கண்டுபிடித்து, தனது ஷூவுடன் இணைத்து வைக்கிறார். அந்த ஷூவை அணிந்து கொண்டு பைக்கில் சுற்றும்போது, அவரை போலீஸ் துரத்துகிறது. போலீசார் பறித்துக்கொள்வார்கள் என்று பயந்து, ஒரு புதருக்குள் ஷூவை மறைத்து வைக்கிறார்.

அந்த புதர் அருகில் செருப்பு தைக்கும் ஒரு தொழிலாளியும், அவருடைய மகளும் (சிறுமி) வசிக்கிறார்கள். டைம் மிசினுடன் கூடிய ஷூ, சிறுமியின் கையில் சிக்குகிறது. அதை யோகி பாபு வாங்கி அணிகிறார். அன்று முதல் அவருடைய வாழ்க்கையில் வசந்தம் வீச ஆரம்பிக்கிறது

இந்த நிலையில், நகரில் சிறுமிகளை கடத்தும் ஒரு கும்பல் தங்களின் ரகசிய வேட்டையை தொடங்குகிறது. சிறுமிகளை பிடித்து டேங்கர் லாரிகளுக்குள் மறைத்து வைத்து கடத்துகிறார்கள். அவர்களிடம், செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகள் பிரியாவும் சிக்குகிறாள். கடத்தப்படும் சிறுமிகள் அனைவருமே அழுது புலம்பிக் கொண்டிருக்கும்போது, பிரியா மட்டும் தப்புவது பற்றி யோசிக்கிறாள். கடத்தப்படும் சிறுமிகள் அனைவரையும் ஒன்று திரட்டுகிறாள்.

அவளுடைய முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா, இல்லையா? என்பது, கிளைமாக்ஸ்...

யோகி பாபு சும்மா உதார் காட்டும் ரவுடியாக வருகிறார். அவர் வருகிற சீன்களில் எல்லாம் தியேட்டரில் ஆரவாரம். கடத்தப்படும் சிறுமிகளை மீட்கும் கதைநாயகனாக திலீபன் வருகிறார். இவர் கடத்தல் ஆசாமிகளுடன் மோதும் சண்டை காட்சி, இருக்கை நுனியில் உட்கார வைக்கிறது.

சிறுமி பிரியாவாக வரும் ப்ரியா கல்யாண், கதாபாத்திரத்துக்கு பொருத்தமான தேர்வு. ப்ரியா எதிர்கால நாயகி ஆகிவிடுவார். சாம் சி.எஸ்.சின் பின்னணி இசை, காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது. டைரக்டர் கல்யாண். படத்தின் ஆரம்ப காட்சி எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. டேங்கர் லாரிக்குள், சிறுமிகள் மறைத்து வைக்கப்படும் காட்சிகள் கண்களை ஈரமாக்குகின்றன. தப்பித்துப்போகும் காட்சியை இவ்வளவு நீளமாக இழுத்திருக்க வேண்டாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com