சிங்கிள் ஷங்கரும், ஸ்மார்ட் போன் சிம்ரனும்: சினிமா விமர்சனம்

சிங்கிள் ஷங்கரும், ஸ்மார்ட் போன் சிம்ரனும்: சினிமா விமர்சனம்
Published on

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் பெண் உணர்வுகளை கொண்ட ஸ்மார்ட் போன் ஒன்றை ஐ.டி பட்டதாரி ஷாரா கண்டுபிடித்து அதற்கு சிம்ரன் என்று பெயர் வைக்கிறார். ஆனால் அந்த செல்போன் அவரிடம் இருந்து திருடப்பட்டு ஒரு கடையில் விற்கப்படுகிறது.

சிம்ரன் போனை உணவு டெலிவரி செய்யும் சிவா விலைக்கு வாங்குகிறார். அதன் பிறகு சிவா வாழ்க்கையில் மாற்றம். சிம்ரன் போன் தனது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சிவாவின் ஆசைகளை நிறைவேற்றுகிறது. ஒரு கட்டத்தில் சிவாவை காதலிக்கவும் செய்கிறது. ஆனால் ஸ்மார்ட் போனை எப்படி காதலிக்க முடியும் என்று சொல்லி சிம்ரன் காதலை நிராகரிக்கிறார். அஞ்சு குரியனுக்கும், சிவாவுக்கும் காதல் மலர்கிறது.

இதனால் கடுப்பாகும் சிம்ரன், இருவரையும் பிரிக்க தனது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. காதலர்களை சிம்ரனால் பிரிக்க முடிந்ததா? சிவா நிலைமை என்ன ஆனது என்பது மீதி கதை.

சிவாவுக்கு வழக்கம்போல் டைமிங் காமெடி கைக்கொடுக்கிறது. உணவு டெலிவரி செய்பவர்களின் பிரச்சினைகளை நகைச்சுவையாக சொல்லிய விதத்திலும் கவனம் பெறுகிறார். ஸ்மார்ட் போன் நுண்ணறிவு பெண் சிம்ரனாக வரும் மேகா ஆகாஷ் அழகில் வசீகரிக்கிறார்.

அஞ்சு குரியன் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். அப்பாவாக வரும் மனோ நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. மாகாபா ஆனந்த், பகவதி பெருமாள், நான் கடவுள் ராஜேந்திரன், ஷாரா எல்லோரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் இருப்பதால், படம் முழுவதும் ஏராளமான லாஜிக் மீறல்கள். ஆனால் கவனம் அதில் திரும்பாத அளவுக்கு சிரிக்க வைக்கும் வேலையை சரியாக செய்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் ஷா. செல்போன் மாதிரியான நவீன கண்டுபிடிப்புகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய விதமும் சிறப்பு.

ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனின் கேமரா கோணங்கள் படம் முழுக்க பேசுகிறது. லியோன் ஜேம்ஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பலம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com