“சீதா பயணம்” சினிமா விமர்சனம்

அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ள "சீதா பயணம்" படம் 14ந் தேதி காதலர்கள் தினத்தில் வெளியானது.
 “சீதா பயணம்” சினிமா விமர்சனம்
Published on

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் எழுதி, இயக்கியுள்ள படம்.

சிறுவயதிலேயே தாயை பறிகொடுத்து நிற்கும் ஐஸ்வர்யா, தந்தை சத்யராஜ் அரவணைப்பிலும், அன்பிலும் வளர்கிறார். சமையல் கலை நிபுணராக (செப்) ஆசைப்படும் ஐஸ்வர்யா, வெளியூரில் நடக்கும் சமையல் கலை தொடர்பான ஒரு கருத்தரங்குக்கு செல்கிறார்.

கருத்தரங்குக்கு செல்லும் வழியில் நிரஞ்சனை சந்திக்கிறார். அவருக்கு லிப்ட் கொடுத்து பயணிக்கிறார். அப்படி செல்லும் வழியில் டீக்கடைக்காரர், பள்ளி குழந்தைகள், ரோட்டில் பழம் விற்பவர் என அனைவரையும் சந்திக்கிறார ஐஸ்வர்யா.

ஒருவழியாக நிரஞ்சனையும் அவர் ஊரில் இறக்கி விட்டு கருத்தரங்கு கூடத்துக்கு செல்கிறார் ஐஸ்வர்யா. கருத்தரங்கு நடக்கும் இடத்துக்கு அருகே வரும்போது, அந்த கட்டிடம் வெடித்து சிதற, மயிரிழையில் உயிர் தப்புகிறார்.

தான் தாமதமாக வந்ததால் தான் உயிர் தப்பிக்க முடிந்தது என்று எண்ணும் ஐஸ்வர்யா, தன்னை தாமதப்படுத்த உதவிய, தான் வழியில் சந்தித்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல நினைக்கிறார் ஐஸ்வர்யா. அதன்பிறகு என்ன ஆனது என்பதே மீதி கதை.

ஐஸ்வர்யா அர்ஜூன் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார். நடிப்பு தாண்டி நடனத்திலும் கலக்குகிறார். பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கோவை சரளா ஆகியோரின் அனுபவ நடிப்பு கைகொடுத்துள்ளது. நினைவில் நிற்கும்படியான நடிப்புக்கு பாராட்டலாம்.

கதாநாயகனாக வரும் நிரஞ்சன் ஓவர் ஆக்டிங். அவரது கதாபாத்திரம் மனதில் நிற்க மறுக்கிறது. இதர நடிகர்-நடிகைகளின் நடிப்பும் ஓகே ரகம்.

அர்ஜூன் மற்றும் துருவ் சார்ஜா ஆகியோர் கொஞ்சநேரம் வந்தாலும் தங்கள் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்துவிடுகிறார்கள்.

ஜி.பாலமுருகனின் ஒளிப்பதிவும், அனுப்ரூபன் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கின்றன.

எதார்த்தமான காட்சிகள் பலம். காட்சிகளின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

அன்பு, பாசம், காதல் ஆகியவற்றை ஒருசேர பயணிக்க விட்டு, அதில் நம்மையும் அழைத்து செல்ல முயன்றுள்ள இயக்குனர் அர்ஜூன், ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார். அவரது ஆக்‌ஷன் காட்சிகளுக்கு சல்யூட்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com