மூடநம்பிக்கை - "பன்னிக்குட்டி" சினிமா விமர்சனம்

பன்னிக்குட்டியால் பல பிரச்சினைகளை சந்திக்கிறார் கருணாகரன். அதே பன்னு குட்டியால் தன் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும் என நம்புகிறார் யோகி பாபு. பன்னிக்குட்டிக்காக இந்த இருவருக்கும் நடக்கும் பிரச்சினையே படத்தின் கதை.
மூடநம்பிக்கை - "பன்னிக்குட்டி" சினிமா விமர்சனம்
Published on

ஒரு பன்றிக்குட்டியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து திரைக்கதையை தயார் செய்து இருக்கிறார்கள். நகைச்சுவை நடிகர் கருணாகரன் கதைநாயகன் ஆகியிருக்கிறார். வேலை எதுவும் செய்யாமல் சுற்றும் அவரை அப்பா டி.பி.கஜேந்திரன் திட்டிக்கொண்டே இருக்கிறார். கருணாகரன் 'பைக்'கில் செல்லும்போது, ஒரு வெள்ளை பன்றிக்குட்டி மீது மோதி விடுகிறார். பயந்து போன அவர் நண்பருடன் கோடங்கி திண்டுக்கல் லியோனியிடம் போய் குறி கேட்கிறார். அவரை கோடங்கி பயமுறுத்தி விடுகிறார். ''மீண்டும் ஒருமுறை அந்த பன்றிக்குட்டி மீது 'பைக்'கினால் மோதிவிடு'' என்கிறார். கருணாகரன் நண்பர் தங்கதுரையுடன் பன்றிக்குட்டியை தேடி அலைகிறார். அந்த வெள்ளை பன்றிக்குட்டியை யோகி பாபுவுக்கு திருமண பரிசாக கொடுக்கிறார்கள். அதை அவர் கூண்டில் அடைக்கிறார். பன்றிக்குட்டி கூண்டை திறந்துகொண்டு வெளியே ஓடுகிறது. கருணாகரன், யோகி பாபு ஆகிய இருவருக்கும் மத்தியில் அது மாட்டிக்கொள்கிறது. இரண்டு பேரில் யார் அந்த பன்றிக்குட்டியை கைப்பற்றுகிறார்கள்? என்பது தமாசான 'கிளைமாக்ஸ்.'

'காமெடி' பண்ணிக்கொண்டிருந்த கருணாகரன் ஒரு படி மேலே போய் கதைநாயகன் ஆகியிருக்கிறார். படம் முழுக்க அவர் கலகலப்பு நாயகனாகி சிரிக்க வைக்கிறார். தன் மீது லட்சுமிப்ரியாவுக்கு காதல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் காட்சியில், கதைநாயகன் என்ற அந்தஸ்துக்கு பொருத்தமானவர்தான் என்று நம்பவைக்கிறார்.

யோகி பாபுவின் வசன காமெடிக்கு அவ்வப்போது தியேட்டரில், ஆரவாரம். கோடங்கி வேடத்துக்கு லியோனி, பொருத்தமான தேர்வு. இவர்களுடன் பூசாரியாக சிங்கம்புலி, நண்பர் பாண்டியாக தங்கதுரை, அப்பா வேடத்தில் டி.பி.கஜேந்திரன் ஆகியோரும் கலகலப்பூட்டுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சதீஷ் முருகன், இசையமைப்பாளர் கே ஆகிய இருவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக பதிவு செய்து இருக்கிறார்கள். அனுசரண் இயக்கியிருக்கிறார். ஒரு பன்றிக்குட்டியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து இரண்டரை மணி நேரம் சிரிக்க சிரிக்க கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் அனுசரண்.

படத்தின் முதல் பாதி சுமாரான வேகத்தில் கடந்து செல்கிறது. இரண்டாவது பாதியில், நேரம் போனது தெரியவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com