சுரேஷ் கிருஷ்ணாவின் “அனந்தா” - சினிமா விமர்சனம்

சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘அனந்தா’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக படம் தயாராகியுள்ளது.
தொழில் அதிபரான ஜெகபதி பாபு, எதைப்பற்றியும் கவலையில்லாமல் ஓய்வில்லாமல் உழைக்கிறார். வேலையே கதி என இருக்கிறார். அதேபோல மனைவி இழந்த சோகத்தில் கடவுளை வெறுக்கும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு, பல அதிர்ச்சிகள் தெரியவருகிறது. நடன கலைஞரான அபிராமி வெங்கடாசலத்துக்கு ஒரு பெரிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முன்பாக காலில் அடிபட்டு, நடனமாட முடியாமல் போகிறது. இதனால் அவரது தந்தை தலைவாசல் கடவுளை திட்டுகிறார். மரண படுக்கையில் இருக்கும் தனது மகனை டாக்டர்களே கைவிரித்துவிட்ட நிலையில், அடுத்து என்ன செய்வது என்று பரிதவிக்கிறார் சுகாசினி. அமெரிக்காவில் காட்டுத்தீயில் இருவர் வாழும் ஒரு வீடும் சிக்குகிறது. இந்த ஐந்து பேரின் வாழ்க்கையும் ஒரு நேர்க்கோட்டில் சந்திக்கும் சூழலில் சத்யஸ்ரீ சாய்பாபா அவர்களை காப்பாற்றினாரா? அவர்களது வாழ்வில் என்ன நடந்தது? இந்த ஐந்து பேருக்குமான தொடர்பு என்ன? என்பதே பக்தி மனம் கமழும் கதை.
ஒய்.ஜி.மகேந்திரன் தன் அனுபவ நடிப்பால் கவருகிறார். மனைவியை இழந்த ஒரு முதியவரின் வேதனையை எதார்த்த நடிப்பால் கொட்டி கலங்கடிக்கிறார். உணர்ச்சிகரமான நடிப்பால் சுகாசினி கவனம் ஈர்க்கிறார். ஜெகபதி பாபுவின் நடிப்பில் பெரியளவில் ஈர்ப்பில்லை. தலைவாசல் விஜய் நடிப்பும் கைகொடுத்துள்ளது.
இதர நடிகர்- நடிகைகளின் நடிப்பும் திருப்திகரமாக உள்ளது. சஞ்சய் ஒளிப்பதிவும், தேவாவின் இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. பின்னணி இசையும் ஆன்மிக மணம் வீசுகிறது.
மனதை நெகிழச் செய்யும் பக்தி பரவச காட்சிகள் படத்துக்கு பலம். கைகூப்பி அழைத்தால் இறைவன் மனம் அருள்வான் என்பதை காட்டிய விதம் அழகு. மெதுவாக நகரும் திரைக்கதையும், எளிதில் கணிக்கக்கூடிய கதையும் பலவீனம்.
ஐந்து பேரின் வாழ்க்கையில் இருந்து அற்புதமான அனுபவங்களை, கடவுள் நம்பிக்கை என்ற அடிப்படையில் சொல்லி ஆன்மிக படைப்பாக கொடுத்துள்ளார், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.






