

சென்னை,
ஒரு வங்கியில் கொள்ளையடிக்கும் மூன்று பேர், அந்த வங்கியில் இருக்கும் பிரித்விராஜை பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். எதிர்பாராத விபத்தில் அந்த மூன்று கொள்ளையர்களும் இறந்துபோக, அவர்களை பற்றிய முக்கிய ஆதாரம் பிரித்விராஜ் கையில் சிக்குகிறது.
பிரித்விராஜுக்கு கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் திருடர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்கும் போலீஸ், அவர்கள் இறந்துவிட்டதால், அவர்கள் கொள்ளையடித்த பணத்தை கைப்பற்ற முடியாமல் தவித்து போகிறார்கள். இதற்கிடையில் போலீசாரின் சந்தேகப்பார்வை பிரித்விராஜ் பக்கம் திரும்புகிறது.
இதனால் பிரித்விராஜ் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு சிக்கல்களில் சிக்கி மனம் நொந்து போகிறார்கள். அவர்களை இன்னும் பல சிக்கல்களில் சிக்க வைக்க சதிகள் நடக்கிறது. அந்த சதி வலைகளில் இருந்து பிரித்விராஜ் குடும்பத்தினர் தப்பித்தார்களா? சம்பந்தமே இல்லாத அந்த வங்கிக்கு பிரித்விராஜ் சென்றது ஏன்?, கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே போனது? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் பிரித்விராஜ் தனது மவுனமான நடிப்பால் அசத்துகிறார்கள். ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கும் அவர், எமோஷனல் காட்சிகளிலும் முத்திரை பதிக்கிறார். பிரித்விராஜின் மனைவியாக நடித்திருக்கும் பார்வதி திருவோத் நல்ல தேர்வு. இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
போலீஸ்காரராக ஹக்கிம் ஷாஜகானின் நடிப்பு பலம் சேர்க்கிறது. ஜேக்கப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அசோகன், முதல்-அமைச்சராக வரும் விஜயராகவன், டி.எஸ்.பியாக சங்கர் ராமகிருஷ்ணன், வங்கி கொள்ளை வழக்கை விசாரிக்கும் குற்றப்பிரிவு அதிகாரியாக நடித்திருக்கும் மதுபால், பிரித்விராஜின் மூத்த மகளாக நடித்திருக்கும் ஜியா மற்றும் இளைய மகளாக நடித்திருக்கும் சிறுமி என அனைவருமே நல்ல தேர்வு.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா பணிகளில் பிரமிப்பு. ஜேக்ஸ் பிஜாயின் இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது. பின்னணி இசையும் பிரமாதம். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மிரட்டல். லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறது.
ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் அளவு, விறுவிறுப்பான கதை சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார், இயக்குனர் நிஷாம் பஷீர்.
நல்ல திரில்லர் கதைக்களம்.